தமிழ் இளைஞரின் மரணத்திற்கு எதிரான கடையடைப்பு போராட்டம் பயனற்றது – பொது பாதுகாப்பு அமைச்சர்

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டம் தேவையற்ற ஒன்று என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் கடையடைப்பு போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடையடைப்பு போராட்டத்திற்கு எந்த காரணமும் இல்லை. “கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அதை நடத்த எந்த காரணமும் இல்லை.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற உத்தரவுகளின்படி அடுத்த நடவடிக்கைளை நாங்கள் எடுப்போம்.
இந்நிலையில், கடையடைப்பு போராட்டம் நடத்துவது பயனற்ற செயல்.”
மேலும், இதேபோன்ற சம்பவங்கள் மற்ற மாகாணங்களிலும் நடப்பதாகவும், ஆனால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இவ்வாறு கடையடைப்பு போராட்டங்களை நடத்துவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“இந்த சம்பவங்களை நாம் இனம் அல்லது மதத்தின் பார்வையில் பார்க்கக்கூடாது. ஒரு குற்றம் நடக்கும்போது, பொறுப்பான எவருக்கும் எதிராக, அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இதை நாங்கள் நடைமுறையில் நிரூபித்துள்ளோம்.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முல்லைத்தீவு – முத்து ஐயன்கட்டு பகுதியில் இராணுவத்தின் தாக்குதலில் 32 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் வடக்கு கிழக்கு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்துள்ள முத்து ஐயன்கட்டு குளத்தில் குறித்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.