‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி சபைக்குப் பெரும் பங்கு – வடக்கு ஆளுநர்
“ஜனாதிபதியின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்க வேண்டும்.”
– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
“உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களைத் தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்குச் செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை பொது மரக்கறிச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் செயலர் திருமதி தாரணி கஜரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், “ஒதுக்கப்படும் நிதியை உரிய காலத்தில் செலவு செய்து முடிப்பதென்பது எமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. ஆனால், இந்தக் கட்டடத்தை மிக நேர்த்தியாக உரிய காலத்தில் நிறைவேற்றிய ஒப்பந்தக்காரருக்கு நன்றி.” – என்று தெரிவித்தார்.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில்,
“பௌதீக வளங்களின் முன்னேற்றம் என்பது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அதேபோன்று தனித்து பௌதீக வளங்களின் முன்னேற்றம் மாத்திரமும் அபிவிருத்தியாகிவிடாது. எங்களின் சேவையை மேம்படுத்தும்போதுதான் அபிவிருத்தி முழுயடையும். எனவே, மக்களுக்குத் தரமான, அன்பான, விரைவான சேவையை வழங்க முன்வரவேண்டும்.
தற்போது எமக்குள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகர சபையின் செயலர் ஆகியோர் இளையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் உத்வேகத்துடனும் துடிப்புடனும் செயலாற்றுகின்றனர்.
இந்தப் பொதுச் சந்தைக்குரிய காணியைக் கொள்வனவு செய்து கட்டடம் அமைத்து இன்று மக்களுக்குக் கையளிக்கின்ற சபையின் செயலரையும் பணியாளர்களையும் பாராட்டுகின்றேன்.
இதேபோன்று திறம்பட பணியாற்றுவதுடன் எதிர்காலத்தில் இந்தப் பொதுச் சந்தையை பராமரிப்பதிலும்தான் இதன் வெற்றி தங்கியிருக்கின்றது.” – என்றார்.
இந்த நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலர் சி.சத்தியசீலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் பொ.ஸ்ரீவர்ணன், பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதா யோ.இருதயராஜா, பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அ.சா.அரியகுமார், பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.