தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்
![தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்](https://oruvan.com/wp-content/uploads/2025/01/Presidential-Election-2024-1.jpg)
தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசத்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன், உள்ளூராட்சி சபைகளுக்கான ஆயுட்காலம் முடிவடைந்தது.
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் இத்தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தமது அரசாங்கத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்திருந்தது.
அதன் பிரகாரம் ஆட்சிமாற்றத்தின் பின்னர் தேர்தல் தொடர்பிலான அறிவிப்புகளை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நடத்த வேண்டுமென உயர்நீதிமன்ற தீர்ப்பொன்று வெளியாகியிருந்தது.
என்றாலும், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வரவு -செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாமை உள்ளிட்ட காரணிகளால் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளதால் தற்போது உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதிகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே தேர்தலுக்கான திகதி ஒதுக்கப்படும் என அரச தரப்பு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
குறிப்பாக ஏப்ரல் 22 அல்லது 25ஆம் திகதி தேர்தலை நடத்தும் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, இந்த மாதம் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ள 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்கம் மக்களுக்கு வழங்க உள்ள சில சலுகைகள் இத்தேர்தலில் தாக்கத்தை செலுத்தும் எனவும் அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(சுப்ரமணியம் நிஷாந்தன்)