தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இ.தொ.கா அனுப்பியுள்ள கடிதம் – புதிய யோசனையொன்று முன்வைப்பு
நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் விருப்பு வாக்கு முறை காரணமாக பெருமளவு வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாகின்றன. வாக்குச் சீட்டில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைக்க முடியும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளை தவிர்ந்த சுயேட்சை குழுக்களுக்கு எண் வடிவில் இலக்கங்கள் வழங்கப்படுகின்றன.
அதே நேரத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் விருப்பு வாக்குகளுக்கும் எண் வடிவில் இலக்கங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு எண் வடிவில் இலக்கங்கள் இரண்டு இடங்களில் காணப்படுவதால் வாக்காளர்கள் குழப்பம் அடைகின்றனர். இதனால் வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு வழங்கும் விருப்பு வாக்குகள் என்ற எண்ணத்தில் சுயேட்சை குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எண்களின் மேல் புல்லடி இடுகின்றனர். இதனால் இவ்வாறான வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக கணிக்கப்படுகின்றது.
இந்நிலையை மாற்றி அமைப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும். வாக்காளர்களை தெளிவுபடுத்தும் மாதிரி வாக்குகளை அச்சிடுவது சட்டத்துக்கு முரணான விடயமாகும். இதனால் அரசியல் கட்சிகளோ சுயேட்சை குழுக்களோ மாதிரி வாக்குச் சீட்டுகளை அச்சடித்து பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் காணப்படுகிறது.
தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்கள் இலகுவாக வாக்குச்சீட்டை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக வாக்குச்சீட்டில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அதாவது சுயேச்சை குழுக்களுக்கு வழங்கப்படும் இலக்கங்கள் எண்களில் அல்லாமல் அதை எழுத்துருவில் வழங்கினால் இரண்டு இடங்களில் எண் காட்சிப்படுத்தப்படுவது தவிர்க்கப்படும்.
இதனால் வாக்காளர்கள் கட்சியின் சின்னத்துக்கு வாக்களித்தவுடன் நேரடியாக தாம் விரும்பும் வேட்பாளருக்கான விருப்பு எண்களை தெரிவு செய்வதற்கு இலகுவாக இருக்கும். இது சம்பந்தமாக எமது கருத்துக்களை தெரிவிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எமக்கு ஒரு நேரத்தை ஒதுக்கி தந்தால் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தலின் போது நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.