2026 இனை ஆரம்பத்தில் இருந்தே சரியாக ஆரம்பிப்போம் – சாவித்ரி போல்ராஜ்

2026 இனை ஆரம்பத்தில் இருந்தே சரியாக ஆரம்பிப்போம் – சாவித்ரி போல்ராஜ்

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்துடன், “ஆரம்பத்திலிருந்தே சரியாக தொடங்குவோம்” எனும் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இலங்கையின் எதிர்கால சந்ததியினரை அறிவார்ந்த, கருணையுடனான, சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளாக வளர்த்தெடுப்பதே எமது நோக்கமாகும் என, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

2026 புத்தாண்டை வரவேற்பதற்கும், ஆண்டின் உத்தியோகபூர்வ கடமைகளை முறையாக ஆரம்பிப்பதற்குமாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் நேற்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் இவ்வாறு தெரிவித்தார்.

ஆரம்ப குழந்தைப் பருவ மேம்படுத்த பௌதிக, கொள்கை ரீதியான, நெறிமுறை சார்ந்த அபிவிருத்தியை ஏற்படுத்துவதே எமது முக்கிய குறிக்கோள் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பாக, மேம்படுத்தப்பட்ட தரநிலைகள், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதன் மூலம் சிறுவர்களின் முன்பிள்ளைப்பருவ வளர்ச்சியை வலுப்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

‘எவரையும் விட்டுச் செல்லக் கூடாது’ (Leaving No One Behind) எனும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாகவும், சிறுவர்களை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்குள்ள பொறுப்பை உணர்ந்ததாகவும், எமது அமைச்சு பாதுகாவலர்கள் இல்லாத மற்றும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களின் பராமரிப்பில் உள்ள சிறுவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வளமான சூழலை உருவாக்குவதில் 2025 ஆம் ஆண்டு முழுவதும் விசேட கவனம் செலுத்தியது.

பெண்களின் முன்னேற்றத்திற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியுதவிகள் மற்றும் அபிவிருத்தி பங்காளர்களின் பங்களிப்புடன், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுச் செயல்பாட்டில் பெண்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். என அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் திருமதி தரங்கனி விக்ரமசிங்க, மேலதிக செயலாளர்கள், அனைத்துப் பிரிவுகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )