பாதாள உலகக் கும்பலை வேரோடு பிடுங்குவோம்

பாதாள உலகக் கும்பலை வேரோடு பிடுங்குவோம்

இலங்கையில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார  தெரிவித்தார்.

நாட்டின் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் இத்தகைய குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய எவரும், எத்தகு அதிகாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், “நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் இந்தளவுக்குக் கட்டற்று வளர்ந்தமைக்கு கடந்த கால ஆட்சியாளர்களே பொறுப்புக் கூற வேண்டும்” என்றும் சாடினார்.

“இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த அச்சுறுத்தலான சூழலுக்கு ராஜபக்ஷக்களின் ஆட்சியே அடித்தளம் இட்டது. அவர்களது அரசியல் ஆதரவே இக்குழுக்கள் இன்று விஸ்வரூபம் எடுக்கக் காரணம்” என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

“இலங்கையில் பாரிய குற்றங்களைப் புரிந்துவிட்டு, வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழும் பாதாள உலகத் தலைவர்களைக் குறிவைத்து அரசு புதிய வியூகங்களை வகுத்துள்ளது. வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் சகல பாதாள உலக உறுப்பினர்களையும் சர்வதேச பிடியாணைகள் ஊடாகக் கைது செய்து, அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வந்து சிறையில் அடைப்போம்.” – என்றும் நீதி அமைச்சர் உறுதியளித்தார்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க சர்வதேச பொலிஸார் இலங்கை அரசுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப ரீதியாகவும் புலனாய்வு ரீதியாகவும் இக்குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )