திருகோணமலை விவகாரத்தில் எவருக்கும் அரசியல் இலாபம் தேட இடமளியோம் – நளிந்த ஜயதிஸ்ஸ

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து கொண்டு எந்தவொரு தரப்பினருக்கும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
”நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காகவே காவல்துறை உள்ளது.
எனவே, எந்தவொரு சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் சட்டச் சீர்குலைவு ஏற்படுவதற்கு காவல்துறை ஒருபோதும் அனுமதிக்காது.
இந்த சம்பவத்தில் குறித்த இடத்தில் தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையொன்றை நிர்மாணிக்க செல்ல சில காலம், சில கட்டுப்பாடு மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
குறித்த கட்டுப்பாடுகளை மீறியமை தொடர்பில் அந்த கட்டடத்தை இடிப்பதற்கான உத்தரவொன்றும் உள்ள நிலையிலேயே அங்கு புத்தர் சிலையொன்றும் கொண்டுவரப்பட்டது.
இலங்கையின் வரலாற்றை நோக்குமிடத்து, புத்தர் சிலையொன்று சேதப்படுத்தப்படுமானால், அதன் பின்னர் உருவெடுக்கும் பிரச்சினைகள் எவ்வளவு பாரதூரமானதாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.
எனவே, இத்தகைய அசம்பாவிதங்களை தவிர்க்கவே, அந்த சிலையை பாதுகாப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்துள்ளது, அதற்கமைய, இது தொடர்பான விசாரணைக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றம் தவணையிட்டுள்ளது.
அத்துடன், குறித்த திகதிவரை, மேற்படி பிரதேசத்தில் எந்தவொரு புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த பிரதேசத்தில் அமைதியை பேணும் வகையில் காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், அந்த பகுதியில் தேரர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில், தொடர்புடைய அனைத்து தரப்புகளுடனும் அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது.
இவ்வாறான பின்னணியில் குறித்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, எவரேனும், அரசியல் இலாபம் பெறுவதற்கு, கூட்டங்களுக்கு மக்களை கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுமாயின் அரசாங்கம் அதனை முறியடிக்கும்.
தற்போது அகற்றப்பட்ட புத்தர் சிலை அதேபகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தவிடயத்தில் நீதிமன்றின் எதிர்வரும் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருக்கும்“ என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
