
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை
சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக மிகக் கடுமையான முறையில் சட்ட நடவடிக்கையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (8) நடைபெற்ற விசேட ஊடக வியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சித்திரை புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் ஏற்படும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்தார். இப்பண்டிகைக் காலத்தில் ஒரு சிறிய வாகன விபத்து இடம்பெற்றாலும், அதில் சம்பந்தப்பட்ட சாரதிகள் போதைப்பொருள் பாவித்தமையைக் கண்டறியும் சோதனைக்கு உடனடியாக உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்த அவர், ஆகையால் வீதிப் பாதுகாப்பை பேணும் வகையில் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் சித்திரை புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் வீதிகளில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் உயிரிழப்புகளை தவிர்க்கவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் விசேட கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்
