லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அபு கட்டால் கொல்லப்பட்டார்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அபு கட்டால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்து வரும் லஷ்கர்-இ-தொய்பாவின் மூளையாக அபு கட்டால் செயல்பட்டதாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தியாவால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதியான அபு கட்டால் என்ற பைசல் நதீம், நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல், 2023ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நடத்த தாக்குதல் ஆகியவற்றுக்கும், பைசலுக்கும் தொடர்பு இருப்பதுதேசிய புலனாய்வு அமைப்பின் பதிவுகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஜோரியில் தாக்குதலில் தேசிய புலனாய்வு அமைப்பின் குற்றப்பத்திரிகையில் அபு கட்டாலும் சேர்க்கப்பட்டார்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் உட்பட ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பாகிஸ்தானில் இருந்துகொண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்காக ஆட்கள் சேர்த்தல், ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மை சமூகம், பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதல் போன்றவற்றிலும் இவர் மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகின்றது.