
பார்முலா ஒன் கார் பந்தய தொடரில் லான்டோ நோரிஸ் முதல் முறையாக வெற்றி
பார்முலா ஒன் கார் பந்தய தொடரில் இங்கிலந்தைச் சேர்ந்த லான்டோ நோரிஸ் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டுள்ளார்.
பார்முலா ஒன் கார்பந்தய தொடரின் 24வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி போட்டி, யாஸ் மரினா ஓடுளத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.
பந்தய தூரமான 306.183 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வெற்றியை தனதாக்கிக் கொள்ள நடப்பு சாம்பியன் வீரரான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் உள்ளிட்டவர்கள் தீவிரம் காட்டியிருந்தனர்.
எனினும், ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் இங்கிலாந்தின் லான்டோ நோரிஸ் வெற்றிபெற்று சாம்பியனாகியுள்ளார்.
முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட வெர்ஸ்டப்பென் ஒரு மணிநேரம் 26 நிமிடம் 7.469 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது.
எனினும், ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பட்டத்தை வெல்ல அவருக்கு இந்தப் புள்ளிகள் போதுமானதாக இல்லை.
ஏனெனில் லான்டோ நோரிஸ் முதல் மூன்று இடத்திற்குள் வராமல் இருந்தால் மட்டுமே வெர்ஸ்டப்பெனுக்கு வெற்றி கிடைக்கும் நிலைமை காணப்பட்டது.
எவ்வாறாயினும், லான்டோ நோரிஸ் மூன்றாவது வீரராக இலக்கை கடந்து 15 புள்ளிகளை பெற்றதுடன் சாம்பியன்சிப் பட்டத்தையும் உறுதி செய்திருந்தார்.
இதன்படி, 24 சுற்றுகள் முடிவில் லான்டோ நோரிஸ் மொத்தம் 423 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருந்தார்.
இதன் மூலம் முதல்முறையாக பார்முலா ஒன் கார்பந்தய சாம்பியன்ஷிப் பட்டத்தை லான்டோ நோரிஸ் தட்டிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
