கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு

கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்தாண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் புள்ளியியல் திணைக்களம் நேற்று நில மதிப்பீட்டு குறியீட்டின் அரையாண்டு அறிக்கையை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை மற்றும் மொத்த காணிகளின் மதிப்பீட்டு குறியீடு 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது குடியிருப்பு குறியீட்டில் 14.4 சதவீதம், வணிக ரீதியில் 11.5 சதவீதம் மற்றும் தொழில்துறையில் 8.4 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பதிவு செய்யப்பட்ட மதிப்புகளுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் காணிகளின் மதிப்பீட்டு மதிப்புகள் அதிகரித்துள்ளன.
கொழும்பு மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய நில விலைக் குறியீடு 1998 முதல் 2008 வரை ஆண்டுதோறும் தொகுக்கப்பட்டது. மற்றும் 2009 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அரை வருடாந்திரமாக தொகுக்கப்பட்டது.
அதன்பின்னர் காணி விலைக் குறியீடு 2017 ஆம் ஆண்டு முதல் அரை வருடாந்திரமாக கணக்கிடப்பட்டு 2020 ஆம் ஆண்டு முதல் காணி மதிப்பீட்டு குறியீடு என்ற பெயரில் வெளியிடப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.