காணி உரிமையே நிரந்தர தீர்வு – ஜீவன்
மலையகமக்களின் பிரச்சினைக்கு காணி உரிமையே நிரந்தர தீர்வாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்க மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான்
“மலையகத்தை எடுத்துக்கொண்டால் முதலாவது சம்பளப் பிரச்சினை. ஆயிரம் வேண்டும் இரண்டாயிரம் வேண்டும் என்று ஏலம் விடுகின்றோமே
தவிர அதற்கு நிரந்தர தீர்வைபெறவில்லை.
பெருந்தோட்ட பகுதியில் உள்ள வறுமை குறைவதற்கு நாள் கூலி சம்பள முறையிலிருந்து மாற வேண்டும். நாங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில்
சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். வெளியிலிருந்து கூறுவது இலகு. பெருந்தோட்ட நிறுவனங்களின் ஆதிக்கமே இதற்கு காரணம்.
தற்போது ஆளுங்கட்சியிலுள்ள தொழிற்சங்கத்தை சேர்ந்த தலைவர்கள் மக்களை நாம் ஏமாற்றியதாக கூறுகிறார்கள். அவர்களிடமே தீர்வைக் கேட்டோம். அடிப்படை நாள் சம்பளமாக
2138 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். தற்போது அவர்கள் ஆளுங்கட்சியில் உள்ள நிலையில் மக்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
ஆளும் மற்றும் எதிர்கட்சி இணைந்து மக்களுக்கு உண்மையை எடுத்ரைப்போம். நான் ஆட்சிக்கு வரும் போது எதிர்கட்சியிடமிருந்து எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
தற்போது ஆளுங்கட்சிக்கு கிடைத்துள்ள இந்த பாராளுமன்ற பலத்தைக்கொண்டு மலையக மக்களுக்கு நிரந்தர தீர்வை வழங்க முடியும்.
ஒரே இரவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாம் கூறவில்லை. இருக்கும் காலப்பகுதியில் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.
அமைச்சுப் பொறுப்பிலிருந்து போது 3000 மில்லியம் மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டது. அதனை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரினோம். ஆனால் அதிகரிக்கப்படவில்லை.
வரவு செலவு திட்டத்தில் நிதி அதிகரித்தால் மாத்திரமே சிறப்பாக செயலாற்ற முடியும். இதுவரை மலையகத்தில் 66,000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அப்போதும் மாற்றம்
ஏற்பவில்லை என்றால் பிரச்சினை வீடு அல்ல. காணி உரிமையே தேவைப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பெருந்தோட்ட நிறுவனங்கள் அதன் ஒப்பந்தங்களிலிருந்து மக்கள் வாழும் இடங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
அப்போதே மாற்றம் நிகழும். மலையகத்திற்கு 157,000 வீடுகள் தேவைப்படுகின்றன. இலங்கையின் பொருளாதார நிலைமை கருத்திற்கொண்டால் அதனை செய்ய இயலாது.
ஆனால் அவர்கள் வாழும் காணியை சொந்தமாக்கி கொடுக்க முடியும்” என்றார்.