இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை – அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமையினால் நிறுவன ஊழல் தொடர்ந்து நிலவுவதாகவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது 2025 முதலீட்டு சூழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் லஞ்சக் கோரிக்கைகள் குறைவடைந்துள்ள போதிலும் சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்படும் துறைகளில் ஊழல் நீடிப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேவையற்ற விதிமுறைகள், சட்ட நிச்சயமின்மை, அதிகாரிகளின் பலவீனங்கள் முதலீட்டாளர்களுக்கு சவாலாக உள்ளதாகவும்; குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் தனியார்துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை விமர்சித்துவருவதுடன் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் உட்கட்டமைப்பு துறைகளில் முன்னணி உலகளாவிய நிறுவுனங்கள் பெரும்பாலும் இல்லை என்பதனையும் தெரிவித்துள்ளது
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதங்களை வழங்கியிருந்தாலும், ஆரம்பகாலம் முதல் உள்ள இந்த அரசாங்கத்தின் மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச சித்தாந்தங்கள் காரணமாக பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 400 மில்லியன் டொலர் பெறுமதியிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திலிருந்து இந்திய அதானி கிரீன் எனர்ஜி விலகியதனையும் மேற்கோள்காட்டி குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பலவீனமாக அதிகாரிகள் நிச்சயமற்றதன்மை தேவையற்ற விதிமுறைகள் ஆகியன இலங்கையில் முதலீடு செய்வதற்கான ஏனைய சவால்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊழலை ஒழிப்பதற்கும் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் லஞ்சம் குறைவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.