முதல் டி20 சதத்தை பூர்த்தி செய்தார் குசல் பெரேரா – இலங்கை அணி ஏழு ஓட்டங்களால் வெற்றி
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குசல் ஜனித் பெரேரா தனது முதல் சதத்தைப் பதிவுசெய்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதன்படி, இன்று இடம்பெற்ற மூன்றாது டி20 போட்டியில் குசல் ஜனித் பெரேரா சதம் அடித்துள்ளார்.
இதன் மூலம் இலங்கை அணி சார்பில் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெறுமையையும் அவர் பெற்றுள்ளார்.
முன்னதாக இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்தன சிம்பாவே அணிக்கு எதிராக 2010ஆம் ஆண்டிலும், திலகரத்ன டில்ஷான் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டிலும் சதம் அடித்திருந்தனர்.
இந்நிலையில், 14 ஆண்டுகள் கழிந்து இலங்கை அணி சார்பில் சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடிக்கப்பட்டுள்ளது. இன்றையப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குசல் பெரேரா 44 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
இது இலங்கை அணி சார்பில் டி20 போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதமாகும். எவ்வாறாயினும், அவர் இந்தப் போட்டியில் 46 பந்துகளில் 101 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிந்தார்.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இலங்கை அணி சார்பில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெறுமையும் குசல் பெரேரா பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை பெற்றிருந்தது. குசல் பெரேரா தவிரந்து அணித் தலைவர் சரித் அசலங்க 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதனையடுத்து 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியினர் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை மட்டும் பெற்று ஏழு ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தனர்.
எவ்வாறாயினும், மூன்றுப் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.
இன்றையப் போட்டியின் ஆட்டநாயகனாக குசல் பெரேராவும், தொடரின் சிறப்பாட்டகாரராக ஜேக்கப் டஃபியும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.