கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் – ஆசிரியருக்கு இடமாற்றம் – பணி நீக்கத்துக்கும் உத்தரவு?

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் பாடசாலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது, குறித்த சம்பவம் தொடர்பாக ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் உட்பட பொது மக்கள் இணைந்து மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி, பாடசாலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து குறித்த மாணவி தற்கொலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த ஆசிரியரை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.