
கழிவு முகாமைத்துவத் திட்டத்திற்கு கொரியா நிதியுதவி
கழிவு முகாமைத்துவத் திட்டமொன்றிற்காக 16.6 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) உடன்பாடு தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள நகர்ப்புற திண்மக் கழிவுகளை சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான தேவை அடையாளம் காணப்பட்டிருந்தது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கொய்கா (KOICA) நிறுவனத்திடம் முன்மொழிந்திருந்தது.
இதற்கமைய, இந்தத் திட்டத்திற்கான உடன்படிக்கை அண்மையில் கையெழுத்திடப்பட்டதுடன், இது 2028 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
திட்டத்தின் ஆரம்பக் கலந்துரையாடல் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது, கழிவு முகாமைத்துவ நிலையங்களை அமைப்பதற்குத் தேவையான நிலங்களை அடையாளம் காணும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
கொய்கா பிரதிநிதிகளைக் கொண்ட திட்ட ஆலோசனைக் குழுவினர் எதிர்வரும் 20 ஆம் திகதி குறித்த பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பான இறுதிப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
