டிரம்பின் மிரட்டலுக்கு மத்தியில் கனடியப் பிரதமரைச் சந்தித்த மன்னர் சார்ல்ஸ்

கனடாவின் புதிய பிரதமருக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் அவரைச் சந்தித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் வரி விதிப்பை அதிகரிக்கப்போவதாக மிரட்டி வரும் வேளையில் மன்னர் சார்ல்ஸ், கார்னியின் சந்திப்பு பக்கிங்ஹம் அரண்மனையில் இடம்பெற்றது.
கனடாவுடன் துணை நிற்பதாக சந்திப்பின்போது மன்னர் சார்ல்ஸ் மீண்டும் வலியுறுத்தினார்.
மன்னர் சார்ல்சைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரைத் கார்னி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
கனடாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பொதுவான வரலாற்றையும் பண்புகளையும் பற்றி இரு தலைவர்களும் பகிர்ந்துகொண்டனர்.
ஸ்டார்மரின் வரவேற்புக்கும் அவருடன் நடைபெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களுக்கும் நன்றியுடன் இருப்பதாகத் கார்னி குறிப்பிட்டார்.
அதையடுத்து நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கார்னி பேசினார்.
கனடாமீது அமெரிக்கா தொடுத்துள்ள வர்த்தகப் போரை பொறுத்தவரை இதர நட்பு நாடுகள் தன்னைக் கைவிட்டதுபோல தோன்றுகிறதா என்று திரு கார்னியிடம் கேட்கப்பட்டது.
அதோடு கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவது பற்றியும் டிரம்ப் கூறியிருந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
“வேறொரு நாடு எங்கள் அரசுரிமையை அங்கீகரிக்கத் தேவையில்லை. நாங்கள் அரசுரிமை பெற்ற நாடு. வேறு நாட்டின் பாராட்டும் தேவையில்லை,” என்று கார்னி பதிலளித்தார்.