
கெஹெல்பத்தர வழங்கிய வாக்குமூலம் – சிக்கிய பயங்கர ஆயுதங்கள்
களனி, எண்டெரமுல்ல பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மற்றும் பெருமளவான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதாள உலகக் குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவினர் சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையின் போதே, அவருக்குச் சொந்தமான இந்த ஆயுதங்கள் வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் பராமரிப்பில் நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ஒன்றும், ரி-56 ரகத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு மெகசின்கள் மற்றும் ரி-56 ரக 267 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
எந்தேரமுல்லவிலிருந்து கொழும்பு – கண்டி வீதி வரை உள்ள குறுக்கு வீதியில் அமைந்துள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்ட அறை ஒன்றைச் சோதனையிட்ட போதே அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் களனி முகாம் அதிகாரிகளின் உதவியுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இந்தோனேசியாவிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’, தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
