KAS மன்றத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு – இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ஆய்வு

KAS மன்றத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு – இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ஆய்வு

ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பணிகள் மற்றும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இளம் அரசியல்வாதிகளுக்கான நிகழ்ச்சி தொடர்பில் KAS (Konrad Adenauer Stiftung) மன்றத்தின் இரு பிரதிநிதிகளுக்கும், இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் ஒன்லைன் தொழில் நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார். KAS (Konrad Adenauer Stiftung) மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதிப் பணிப்பாளர் மோர்டிஸ் மத்தியாஸ் ஃபிங்க் மற்றும் திட்ட முகாமையாளர் மேகா சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் KAS மன்றத்துடன் இணைந்து ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்தக் கூட்டத்தை இலங்கையில் நடத்தக் கிடைத்தமை இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு விசேடமான நிகழ்வாக அமைந்தது என்றும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய KAS மன்றத்திற்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த KAS மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் Mortiz Matthias Fink, ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் கொழும்பு நகரத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள நிகழ்ச்சி வெற்றிகரமான நிகழ்ச்சியாக அமையும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், KAS மன்றத்தின் திட்ட முகாமையாளர் மேகா சர்மா இங்கு கருத்துத் தெரிவிக்கையில், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் செயற்பட்டது போன்று பத்தாவது பாராளுமன்றத்திலும் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், மங்கோலியாவில் நடைபெறவுள்ள ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினுடைய வருடாந்த மாநாட்டில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில், இம்முறை ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முதலாவது அமர்வில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டதாகவும், இதில் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் அதைத் தணிப்பதற்கான மூலோபாய முறைகள் குறித்து நிகழ்நிலையில் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன கலந்துகொண்டதுடன், சட்டத்தரணி சாகரிக்கா அதாவுத, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க மற்றும் சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க ஆகியோர் ஒன்லைன் தொழில் நுட்பத்தின் ஊடாக இணைந்திருந்தனர்.

Share This