கரூர் சம்பவம் – முதல்முறையாக மௌனம் கலைந்தார் விஜய்

கரூர் சம்பவம் – முதல்முறையாக மௌனம் கலைந்தார் விஜய்

தனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவத்திற்கு பின்னர் முதல் முறையாக பேசியுள்ள விஜய் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் திகதி தமிழக் வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர்களில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது.

பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரச வைத்தியசாலை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.

அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றில் தமிழக் வெற்றிக் கழகம் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

விஜய் பிரசாரம் செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றை நாடியுள்ளது. இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த நேரத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி.. கரூரில் தவெக எந்த தவறும் செய்யவில்லை.

தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். என்னை பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். .

இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்.

என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், மற்ற கட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது?

பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி.

விரைவில் அனைத்து உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன்.” என மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This