‘கச்சதீவு அரசியல்’ – அநுரவின் பயணத்தால் டெல்லியில் நெருக்கடி

‘கச்சதீவு அரசியல்’ – அநுரவின் பயணத்தால் டெல்லியில் நெருக்கடி

கச்சதீவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்ட திடீர் பயணம் இந்திய அரசியலில் பேசுபொருளாகியுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான பிரச்சினைகளுக்கு இந்தப் பயணம் வழிவகுக்குமா என்ற கோணத்தில் விவாதங்களும் எழுந்துள்ளன.

1974ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தத்தின் ஊடாக கச்சதீவை அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு வழங்கியிருந்தார். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இருநாட்டு மீனவர்களும் இந்தப் பகுதியில் இளைப்பாறலாம் என்ற இணக்கப்பாடு இருந்தது. யுத்தம் காரணமாக ஆரம்பத்தில் மீனவர் பிரச்சினை பேசுபொருளாகவில்லை.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், இலங்கையின் கடற்பரப்பை முழுமையாக இலங்கை கடற்படை தமது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தது முதல் மீனவர்கள் பிரச்சினையும் தலைத்தூக்க ஆரம்பித்தது. தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாக கைதுகள் தொடர்ந்து இடம்பெறுவதுடன், அவர்களது படகுகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் கடற்படையின் தாக்குதல்களுக்கும் தமிழக மீனவர்கள் இறையாகி உள்ளனர்.

கச்சதீவு இந்தியா வசமிருந்தால் பிரச்சினை எழாது

இருநாட்டு அரசுகள் மற்றும் மீனவ சங்கங்களுக்கு இடையில் பல சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ள போதிலும் இன்னமும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை.

என்றாலும், கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்குமாறு தமிழக கட்சிகள் கடந்த பல தசாப்தங்களாக வலியுறுத்தி வருகின்றன. கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதால் இந்தியாவின் கடல் பரப்பு குறிப்பாக தமிழ்நாட்டின் கடல்பரப்பு குறைவடைந்ததால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைதுசெய்யப்படுவதுடன், பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் கடற்படையின் தாக்குதல்களுக்கும் பலியாகியுள்ளனர்.

கச்சதீவு இந்தியாவின் வசமிருந்தால் இந்தப் பிரச்சினை எழாது என தமிழக அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் தினம் தினம் இந்த விடயம் பேசுபொருளாகவே உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் 21ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

இராஜதந்திர மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது

இதன் பின்னர் கச்சதீவு விவகாரம் மீண்டும் பூதாகரமான பிரச்சினையாக மாறியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதால் தமிழக கட்சிகள் இந்தப் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்துள்ளதாக வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்,  விஜயின் கருத்துக்கு பதிலளித்திருந்தார் என்பதுடன், இராஜதந்திர மட்டத்தில் இதுகுறித்து எவ்வித கருத்துகளும் பகிரப்படவில்லை என்பதால் இதனை பொருட்படுத்த தேவையில்லை எனவும் கூறியிருந்தார்.

என்றாலும், நேற்று முன்தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தின் ஒருபகுதியாக கச்சதீவுக்கு சென்றமை இராஜதந்திர மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக இந்திய ஊடகங்களில் இவரது பயணம் குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் இராஜதந்திரிகளும், இந்திய அரசியல்வாதிகளும், கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை தமிழக அரசியல் கட்சிகளுக்கும், இராஜதந்திர மட்டத்திலும் தெளிவாக எடுத்துரைக்கவே, அநுரகுமார திசாநாயக்க கச்சதீவுக்கு அவசரமாக பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கு இடையில் நெருக்கமான உறவு உள்ள போதிலும், இலங்கை சீன சார்ப்பு பல கொள்கைகளை கொண்டுள்ளது. இந்த விவகாரத்துக்கு இராஜதந்திர மட்டத்தில் இணக்கப்பாடுகள் காணப்படாவிடின் எதிர்காலத்தில் பல்வேறு முறுகல்களுக்கு இது வழிவகுக்கும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.

அநுரவின் பயணத்தால் டெல்லியில் பல்வேறு நெருக்கடிகள்

அண்மையில் நேபாளம், பங்களாதேஸ் போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள முறுகல்கள் போன்றதொரு நிலையை இலங்கையுடனும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கச்சதீவு விவகாரத்துக்கு உறுதியான தீர்வுகள் காணப்படுவது அவசியம் என்றும் இந்த விவாதங்களில் பேசுபொருளாக இருந்தது.

இதேவேளை, காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும்தான் கச்சதீவு இந்தியாவிடமிருந்து பறிபோக காரணம் என கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திய பிரதமர் மோடி கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் பிரச்சாரத்துக்காக மோடி தமிழக வரும் போது இந்த விடயத்தை கட்டாயம் பேச வேண்டி சூழல் எழுந்துள்ளதாக தமிழக அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதுடன், இதற்கான நிரந்தர தீர்வு குறித்தும் அவர் பேச வேண்டும். இல்லாவிட்டால் அது தேர்தலில் எதிர்மறை தாக்குதலை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாகும் எனவும் கூறுகின்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சதீவுக்கு பயணம் மேற்கொண்டிருக்காவிடின் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது என்றும் அநுரவின் பயணம் டெல்லியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சு.நிஷாந்தன்

 

Share This