பதவி விலக தயாராகும் ஜஸ்டின் ட்ரூடோ – கடும் நெருக்கடியில் லிபரல் கட்சி
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகப் போவதாக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஆனால் அவர் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்பது ஆண்டுகள் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்த அறிவிப்பை இன்று திங்கட்கிழமை முன்னதாகவே ட்ரூடோ அறிவிப்பார் செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் இந்த தகவல் வந்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் தேர்தலில் லிபரல்கள் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களிடம் மோசமாக தோல்வியடைவார்கள் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், ட்ரூடோவின் பதவி விலகல் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் இல்லாமல் போகும் வாய்ப்பை ஏற்படுத்தும் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரூடோ எப்போது விலகப் போவதாக அறிவிப்பார் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும், ஆனால் புதன்கிழமை நடைபெறும் லிபரல் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தொடர்ச்சியான மோசமான கருத்துக் கணிப்புகளால் பீதியடைந்த லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரூடோவை ராஜினாமா செய்யுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், பதவி விலகல் குறித்து பிரதமர் அலுவலகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
மாறாக திங்கட்கிழமைக்கான பிரதமரின் வழக்கமான அட்டவணையின் கீழ், கனடா-அமெரிக்க உறவுகள் குறித்த அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ட்ரூடோ பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய லிபரல் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ட்ரூடோ உடனடியாக வெளியேறுவாரா அல்லது பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து, முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் (கனேடிய நாடாளுமன்றம்) மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டபோது, ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.