அல்பேனியாவில் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி

அல்பேனியாவில் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி

அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நீதிபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நீதிபதி அஸ்ட்ரிட் கலாஜா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் சொத்து தகராறு தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் சுடப்பட்டனர், ஆனால் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை.

“E Sh” என்ற முதலெழுத்துக்களால் அடையாளம் காணப்பட்ட 30 வயது ஆண் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அல்பேனிய ஊடகங்கள் அவரை எல்விஸ் ஷ்கெம்பி என்று பெயரிட்டுள்ளன. நீதிபதி கலாஜாவின் குடும்பத்தினருக்கு அல்பேனியாவின் பிரதமர் எடி ராமா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் நீதிமன்றங்களுக்குள் கடுமையான பாதுகாப்பையும், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளையும் பிரதமர் கோரியுள்ளார்.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் சாலி பெரிஷா, நீதிபதி கலாஜாவின் கொலை, 35 ஆண்டுகளில் ஒரு நீதிபதி “தனது கடமையைச் செய்யும்போது” கொல்லப்பட்டது முதல் முறை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “இன்று அனைத்து அல்பேனிய சமூகத்தினரும் ஆழ்ந்த பிரதிபலிப்புக்கான நாள்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதிபதி கலாஜாவின் கொலையில் சந்தேக நபர் வழக்கில் தோற்றுவிடுவார் என்று எதிர்பார்த்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஷ்கெம்பியின் மாமாவும் நீதிமன்றத்தின் பாதுகாவலரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நீதிபதி கலாஜா 30 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டத்தரணியாக இருந்தார். 2019 ஆம் ஆண்டு டிரானாவின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் ஆரம்பத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றினார்.

இதேவேளை, பால்கன் நாடுகளில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பொது தகராறுகளுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அல்பேனியாவில் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளதாக ஐ.நா. ஆதரவு பெற்ற பிராந்திய கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This