
ஜோன்ஸ்டனின் வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மார்ச் மாதம் 04 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சாகிர் ஆகிய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அவர்கள் இருவரும் வெலிசர நீதவான் நீதிமன்றத்தினால் வேறு ஒரு வழக்குக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதன்படி, இந்த வழக்கை மீண்டும் மார்ச் மாதம் 04 மற்றும் 18 ஆம் திகதிகளில் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதவான், அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்து அழைப்பாணை விடுவிக்குமாறும் கட்டளையிட்டார்.
அன்றைய தினம் பிரதிவாதியான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் இருப்பார்களாயின், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சத்தோச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
