மகிந்தவின் நெருங்கிய விசுவாசியாக தொடரும் ஜோன்ஸ்டன் – கையளிக்கப்பட்ட முக்கியப் பணி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப்கசவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ.
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்த இவர் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாகவும் செயல்பட்டார்.
மகிந்த ராஜபக்சவின் சிபாரின் பேரிலேயே ஆளுங்கட்சி கொறடா பதவி ஜோன்ஸ்டனுக்கு வழங்கப்பட்டதாக அப்போது ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது.
2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் மீண்டும் மகிந்தவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் வரை ஓயமாட்டேன் என சபதம் எடுத்தவர்களில் ஜோன்ஸ்டனும் ஒருவர்.
அதேபோன்று 2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரையான மகிந்தவின் அரசாங்கத்தின் முக்கிய புள்ளியாக செயல்பட்டவர்களிலும் ஒருவர்தான் ஜோன்ஸ்டன்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், 2020 பொதுத் தேர்தல்களை வழிநடத்திய பொதுஜன பெரமுனவை வெற்றிவாகை சூடவைத்த குழுவிலும் அங்கவகித்தவர்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவை அவர் வழிநடத்தியிருந்தார்.
தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுவரும் சூழலில் இத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பு ஜோன்ஸ்டனிம் வழங்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் அவருக்கு இந்தப் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. மகிந்தவின் நெருங்கிய விசுவாசியாக ஜோன்ஸ்டன் தொடர்வதால் அவருக்கு இந்தப் பொறுப்பு தொடர்ந்து வழங்கப்படுவதாக பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இதேவேளை, எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன், தேர்தலுக்கான நிதியை 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகளையும் மேற்கொள்ள உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.