புதிய வரலாறு படைத்தார் பும்ரா – குறைந்த சராசரியில் 200விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 20க்கும் குறைவான சராசரியுடன் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காம் போட்டியின், இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
தனது 44வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பும்ரா, 19.38 சராசரியுடன் 202 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் மிகவும் குறைந்த சராசரியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில், பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மால்கம் மார்ஷல் (376 விக்கெட்டுகள், 20.94 சராசரி), ஜோயல் கார்னர் (259 விக்கெட்டுகள், 20.97 சராசரி) மற்றும் கர்ட்லி அம்ப்ரோஸ் (405 விக்கெட்டுகள், 20.99 சராசரி) ஆகிய மூவரும் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200வது விக்கெட்டை பும்ரா இன்றைய ஆட்டத்தில் வீழ்த்தியிருந்தார். அவுஸ்திரேலியா அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டிராவிஸ் ஹெட்டை வீழ்த்தியதன் மூலம் பும்ரா தனது 200வது விக்கெட்டை வீழ்த்தினார்.
அதே ஓவரில், மிட்செல் மார்ஷையும் ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் பும்ரா வீழ்த்தினார். இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த வீரராகவும் பும்ரா மாறியுள்ளார்.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்துப் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய விளையாடி வரும் நிலையில், இதுவரை பும்ரா 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும், டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற கபில் தேவின் சாதனையையும் பும்ரா முறியடித்தார்.
கபில் தேவ் 50வது போட்டியின் போது தனது 200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். எனினும், பும்ரா 44வது போட்டியிலேயே 200வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய இரண்டாவது இந்தியர் இவர்தான். முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 37 போட்டிகளுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
2023-25ஆம் ஆண்டுக்காள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 14 போட்டிகளில் மொத்தம் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரே பதிப்பில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின் சாதனையை முறியடித்தார்.
2019-21 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.
எவ்வாறாயினும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரே பதிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியிலில் அவுஸ்திரேலியாவின் நேதன் லயன் முதலிடத்தில் உள்ளார்.
அவர் 2021-23 பதிப்பில் 20 போட்டிகளில் 88 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.