யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும், திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.

திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் குறித்த விமானத்திற்கு விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட தூதராக அதிகாரிகள் , விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு  2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு , திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர், திருச்சி சென்று அங்கிருந்து சிங்கப்பூர் பயணிக்க கூடியவாறான விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், கொழும்பு சென்று சிங்கப்பூர் செல்வதற்கான நேர விரயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இயக்கப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுவரை திருச்சியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்குதான் நாள்தோறும் 2 விமானங்கள் இயக்கப்பட்டன. திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் இந்த விமான சேவைகளை பயன்படுத்ததி வந்தனர்.

இதற்கு அதிகமான கட்டணமும் செலுத்தி வந்தனர். தற்போது யாழ்ப்பாணத்துக்கு திருச்சியில் இருந்து விமானம் இயக்கப்படுவதால் குறைவான கட்டணத்தில் இலங்கையை சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இலங்கை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக கொண்டு சேர்க்கவும் முடியும் என்பதும் எதிர்பார்ப்பு.

திருச்சி- யாழ்ப்பாணம் இடையேயான விமான கட்டணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல மட்டும் 5,900 ரூபா முதல் 6,400 ரூபா வரை மட்டுமே.

இன்றையதினம் சரியாக பிற்பகல் 02.02 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் 27 பணிகள் வருகை தந்தனர். பலாலியிலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன் 3.00 மணியளவில் விமானம் திருச்சியை நோக்கிப் புறப்பட்டது.

இதன் போது யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் சாய் முரளி தலையிலான குழுவினர் கேக் வெட்டி விமானிகளுடன் புதிய விமான பயணத்தினை கொண்டாடினர்.

Share This