
இறுதிப் போட்டியில் தோல்வி – இத்தாலி அணி கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியது
கால்பந்து உலகக் கிண்ண தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய இத்தாலி அணி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியுள்ளது.
ஐரோப்பிய தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் போஸ்னியா அணிக்கு எதிராக போட்டியில் பெனால்டி முறையில் தோல்வியடைந்ததால், இத்தாலியின் உலகக் கோப்பைக் கனவுகள் தகர்ந்தன.
வழக்கமான நேரத்திலும் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்குச் சென்றது.
முன்னாள் உலக சாம்பியன் அணியான இத்தாலி நான்கிற்கு ஒன்று என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தனர்.
முன்னதாக ரஷ்யாவில் நடைபெற்ற 2018 உலகக் கிண்ண தொடருக்கும், கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண தொடருக்கு இத்தாலி தகுதி பெற்றிருக்கவில்லை.
நான்கு முறை உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அணி, தொடர்ச்சியாக மூன்று முறை உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியது கால்பந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இத்தாலி 1934, 1938, 1982 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற போஸ்னியா இரண்டாவது முறையாக உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
