உள்ளூராட்சி மன்றங்களை அரசாங்கம் ஒப்பந்ததாரர்கள் போன்று நடாத்துவது கவலையளிக்கின்றது

உள்ளூராட்சி மன்றங்களை அரசாங்கம் ஒப்பந்ததாரர்கள் போன்று நடாத்துவது கவலையளிக்கின்றது

“மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை இந்த அரசாங்கம் ஒப்பந்ததாரர்கள் போன்று நடாத்துவது கவலையளிக்கின்றது” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் முடக்கப்பட்டிருந்தாலும் தற்போது படிப்படியாக இந்த அரசாங்கம் ஓரளவுக்கேனும் குறிப்பிட்ட சில அத்தியாவசியமான அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்து வருவது வரவேற்கப்படவேண்டியதாகும்.

அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகைக்குட்பட்ட கிராமிய உள்ளக வீதிகளை ஓரளவுக்கேனும் மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் திருத்தம் செய்வதற்கு துறைசார்ந்த அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை
வரவேற்கின்றேன்.

எனினும் இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்தப்படவுள்ள வீதிகளின் தெரிவானது சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுடன் கலந்துரையாடப்படாது தெரிவு செய்யப்பட்டுள்ளமை கவலையளிக்கும் விடயமாகும். அதிலும் சில வீதிகள் குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்தினால் சட்டரீதியாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத வீதிகளாகும்.

இங்கு கட்சி அரசியலுக்கு அப்பால் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் மக்களின் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்ற கட்சிகளே உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்துள்ளன. அதே போன்று அந்த சபைகள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் மக்கள் சந்திப்புகளை நடாத்தி மக்கள் பங்களிப்புடன் தேவைகளை இனங்கண்டு அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தேவைப் பட்டியல் தயாரித்து வைத்திருக்கின்றார்கள். எனவே இங்கு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் மக்களால் முன்மொழியப்பட்ட முன்னுரிமைப்படுத்தப்பட்ட வீதிகளை புனரமைப்பதே சரியான முறையாகும்.

குறிப்பிட்ட ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் கீழ் வருகின்ற அனைத்து வட்டாரங்களையும் உள்வாங்கி வீதி அபிவிருத்திகளை செய்வதே சிறந்தது. எனினும் துரதிஷ்டவசமாக வீதித்தெரிவுகள் சம்மந்தப்பட்ட சபையுடன் கலந்துரையாடப்படாது
நடைபெற்றுள்ளமையை துறைசார்ந்த அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

அத்துடன் இந்த நிதி ஒதுக்கீடானது மாவட்ட செயலகத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. முறையான தொழிநுட்ப மதிப்பீடு செய்யப்படாது நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சில வீதிகளுக்கான திருத்தவேலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி போதாமலுள்ளது. தெரிவு செய்யப்பட்ட வீதிகளின் விபரங்கள் பிரதேச செயலகத்தால் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்படுகின்றது.

குறிப்பட்ட வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடு சபைகளுக்கு வழங்கப்படவில்லை. இங்கு சபைகள் ஒப்பந்ததாரர்களை போன்று செயற்படவேண்டியுள்ளது. அதாவது மாவட்ட செயலகத்துடன் வேலைக்கான ஒப்பந்தமொன்றினை செய்து பின்னர் வேலைகள் முடிவுற்றதும் வேலைக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளவேண்டும். இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் அதிகார சபையை அவமதிக்கும்செயற்பாடாகும்.

எனவே சம்மந்தப்பட்ட சபைகளுடன் கலந்துரையாடி அனைத்து வட்டாரங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட வீதிகளை புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக சபைகளுக்கு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

Share This