ஊடகச் சுதந்திரத்தையும் அதற்கான சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்

ஊடகச் சுதந்திரத்தையும் அதற்கான சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்

சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை ஆற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தின் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு தாமரைக் குளம் அரங்கில் நடைபெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழா 2025இல் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, ஊடக ஆராய்ச்சி, இணையத்தளங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகிய துறைகளில் சிறந்த ஊடகப் பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் ஜனாதிபதி ஊடக அபிமானி விருதினை, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷான் விக்கிரமசிங்க அவர்களுக்கான விருதினை அனில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பேராசிரியர் சுனந்த மஹேந்ர, சிறி ரணசிங்ஹ, அப்துல் ஹமீட், திருமதி லலிதா சிறிபத்தன்ன ஆகியோருக்கும் பிரதமர் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி ஊடக விருது விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

“நமது நாட்டில் தொழில்சார் ஊடகக் கலை கி.பி. 1832இல் அச்சிடப்பட்ட ‘கொழும்பு ஜேர்னல்’ பத்திரிகையிலிருந்து ஆரம்பமானது. அதை அடுத்து, 1866ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி மோதரை ஜுவான் பெர்ணான்டோ அவர்கள் தலைமையில் முதலாவது சிங்களப் பத்திரிகையாக ‘ஞானார்த்த பிரதீபய’ ஆரம்பிக்கப்பட்டது.

திரு. டி. ஆர். விஜேவர்தன அவர்கள் லேக்ஹவுஸ் நிறுவனத்தை ஸ்தாபித்ததை அடுத்து, நம் நாட்டில் இன்னும் பல தனியார் பத்திரிகை நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடும், மக்களுக்குச் சரியான அதே நேரத்தில் உண்மையான தகவல்களைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்த ஊடகவியலாளர்களும் நம் நாட்டில் உருவாகத் தொடங்கினர்.

பிரித்தானிய அரசு பிபிசி அலைவரிசையை ஆரம்பித்த சில வருடங்களுக்குள், தெற்காசியாவின் முதல் வானொலியாக நமது நாட்டில் இலங்கை வானொலி ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய இலங்கையின் தபால் மற்றும் தொலைத்தொடர்புப் பிரிவின் பிரதமப் பொறியியலாளராகக் கடமையாற்றிய பிரித்தானியரான எட்வர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரின் தலைமையிலேயே நமது வானொலி நிலையம் ஆரம்பமானது.

அந்த வானொலி நம் நாட்டு மக்களுக்குப் புதிய அனுபவத்தை பெற்றுக் கொடுத்தது. அதன் முதலாவது தலைவரான திரு. தேவிஸ் குருகே, முதல் நிரந்தரச் சிங்கள அறிவிப்பாளராகப் பணியாற்றிய திரு. டி.எம். கொழும்பகே, பிரபா ரணதுங்க, நந்தா ஜயமான்ன, லிவி ஆர். விஜேமான்ன, சார்ள்ஸ் அபேசேகர, கருணாரத்ன அபேசேகர, எச்.எம். குணசேகர, சரத் விமலவீர, பிரேம்கீர்த்தி டி அல்விஸ் போன்ற இன்னும் பலரை வானொலி பற்றிப் பேசும்போது நமது ஞாபகத்துக்கு வருகின்றனர்.

நம் நாட்டின் ஊடகத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த 1979ஆம் ஆண்டில் ஷான் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரத் தொலைக்காட்சிச் சேவையால் முடிந்தது.

மக்களுக்கு அறிவையும், பொழுதுபோக்கையும் மாத்திரமின்றி, மனப்பான்மை ரீதியிலான மாற்றத்தையும் தொலைக்காட்சியை ஆரம்பித்ததன் மூலம் ஏற்படுத்த முடிந்தது. காலஞ்சென்ற தேவிஸ் குருகே அவர்களின் சிந்தனையில் உருவான ‘கோப்பி கடே’ எனும் தொலைக்காட்சி நாடகத் தொடர் இன்றும் மக்களுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாக இருந்து வருகின்றது.

ஜப்பானிய மக்களிடமிருந்து இலங்கைக்குப் பரிசாகக் கிடைத்த ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 1982 பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஒட்டுமொத்த இலங்கையர்களையும் இலக்காகக் கொண்டு, தொலைக்காட்சித் துறையில் ஒரு முன்னோடியாக உயர்ந்த தரத்தையும், கலைத்துவத்தையும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்து வருவதோடு, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று அரச மொழிகளிலும் தனது சேவையை வழங்க ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ஆற்றல் இருக்கின்றது. எச். எம் குணசேகர, ருக்மின் விஜேமான்ன, சனத் லியனகே, கிவந்த அர்த்தசாத், ஹென்றி ஜயசேன, சாலமன் பொன்சேகா போன்ற ஆளுமைகளை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் எனக் குறிப்பிடலாம்.

இவ்வாறு வளர்ந்து வந்த நம் நாட்டின் ஊடகத் துறை இன்று பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் மாத்திரமின்றி, இணையத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் ஊடகவியல் வரை வளர்ந்துள்ளது.

உண்மையான, சரியான தகவலை அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமையை உறுதி செய்யும் வகையில் ஊடகச் சுதந்திரத்தையும், சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாடாகும் என்பதை நான் இவ்வேளையில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஊடக வெளியை ஒரு பொதுச் சொத்தாகக் கருதி, நாட்டில் ஒரு மனிதநேய ஊடகத் துறையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதகம் ஏற்படுத்தும் பந்திகளை அகற்றி, ஊடகச் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதே வேளை, ஊடகங்களுக்கான புதிய ஊடக ஒழுக்கக் கோவை ஒன்று தேவை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறந்த ஊடகவியலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களைப் பாராட்டுதல், ஊடகவியலாளர்களுக்குத் தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதோடு, குறிப்பாக அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் விதத்தில் அரச ஊடகங்களைத் தரப்படுத்துவதோடு, உயர்ந்த ஊடக ஒழுக்கநெறியைப் பேணுவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஒட்டுமொத்த ஊடகச் செயற்பாடுகளையும் சிறப்பாகப் முன்னெடுப்பதை ஒழுங்குப்படுத்துவதற்கான சுயாதீன ஊடக நிறுவனம் ஒன்றின் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டிருக்கின்றது என்பதையும் நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

ஊடகவியலாளருக்கு வாழ்நாளில் ஒருமுறை மாத்திரமே கிடைக்கப்பெறும் ஜனாதிபதி விருதைப் பெற்ற, ஊடகத் துறைக்காகச் சிறந்த சேவையை ஆற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், நாட்டின் கருத்துச் சுதந்திரத்துக்காக, சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை ஆற்றி வரும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தின் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் அவர்கள் கூறினார்.

இவ்விழாவில் உரையாற்றிய சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள்:

பல வருடங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி விருது விழாவை நடத்த முடிந்ததையிட்டும், நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தமது எழுதுகோல்களையும், குரல்களையும் பயன்படுத்தும் ஊடகவியலாளர்களைப் பாராட்டுவதற்கு கிடைத்தமை குறித்தும் துறைசார் அமைச்சர் என்ற வகையில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது நாம் வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் அதே நேரத்தில், நாட்டின் சகல துறைகளும் புத்தாக்கம் பெற்று வரும் திசையில் நாட்டை வழிநடத்தும் ஒரு காலப்பகுதியிலேயே இருக்கிறோம்.

திட்டமிட்ட, நேர்த்தியான ஈடுபாட்டின் மூலம் எந்தவொரு துறையிலும் மிகக் குறுகிய காலத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும் என்பது இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் தெளிவாகி இருக்கின்றது.

நமது நாடு எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையிலேயே இருந்து வந்தது என்பதை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். சகல துறைகளிலும் தொழிலின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையே நிலவியது. மக்கள் இந்த நாட்டை எம்மிடம் ஒப்படைக்கும்போது, அரசாங்கம் எந்த அளவிற்கு வெற்றிபெறுமோ என்ற நியாயமான சந்தேகத்தை கொண்டிருந்தனர் என்பதை நாம் அறிவோம். இருப்பினும் எம்மால் மிகக் குறுகிய காலத்திற்குள் மக்களுக்கும், நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்திருக்கின்றது. இந்த பெறுபேறானது அனைவரின் பங்களிப்பினாலும், திட்டமிட்ட சேர்ப்பாடுகளினாலும் அடையப்பட்ட ஒன்றாகும்.

சவால்கள் நிறைந்த துறையாகிய பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் மேம்படுத்துவதற்கு ஒழுக்கமும், சரியான முகாமைத்துவமே காரணமாக இருந்தது. எந்தவொரு துறையையும் ஒழுக்கம் மற்றும் முகாமைத்துவம் மூலம் அபிவிருத்தி செய்ய முடியும்.

ஊடகவியலாளர்களாகிய நீங்களும் ஒழுக்கத்துடனும், சரியான முகாமைத்துவத்துடனும் செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் நீங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற அவசியம் இல்லை, இருப்பினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய சரியான புரிதலுடன் நீங்கள் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.

அரசாங்கம் என்ற வகையில், ஊடகவியலாளர்களின் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்காக நாம் செயல்பட்டு வருகின்றோம். ஊடகவியலாளர்களுக்கான பட்டயம் பெற்ற நிறுவனம் ஒன்றினை நிறுவுதல், ஊடகங்களுக்கான ஒரு கொள்கையை உருவாக்குதல், ஒழுக்க விதிகள் கோவையினை உருவாக்குதல் ஆகியவை ஊடகவியலாளர்களின் கருத்துக்களின்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு ஊடக உபகரணங்களைப் பெறுவதற்கும், வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கம் பணம் ஒதுக்கியுள்ளது” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் தெரிவித்தார்.

இந்த விழாவில் மகா சங்கத்தினர், வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, சுகாதாரப் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, பேராசிரியர் பிரணீத் அபேசுந்தர தலைமையிலான நடுவர் குழு உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Share This