
“அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்திய மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம்”
“அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அமெரிக்க ட்ரம்ப், “உலகின் சிறந்த மாணவர்களில் சிலருக்கு அமெரிக்கா கல்வி அளித்துவிட்டு, பட்டப்படிப்பை முடித்தவுடன் அவர்களைத் திருப்பி அனுப்புகிறது.
நீங்கள் அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் பட்டம் பெறுகிறீர்கள், பிறகு நீங்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும், சீனாவுக்குத் திரும்ப வேண்டும், பிரான்ஸுக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்ப வேண்டும். இங்கு தங்குவது மிகவும் கடினம். இது ஒரு அவமானம்.
அமெரிக்காவின் தலைசிறந்த கல்லூரிகளில் இருந்து வரும் நபர்களை நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்த முடிவதில்லை. விசா நிச்சயமற்ற தன்மை காரணமாக, உயர்தரப் பல்கலைக்கழகங்களில் இருந்து வரும் சிறந்த சர்வதேசப் பட்டதாரிகளைத் தக்கவைத்துக்கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.
நல்ல கல்வித் தகுதிகள் இருந்தபோதிலும், சிறப்பாகச் செயல்படும் பல பட்டதாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் சிலர் கல்லூரியில் முதலிடம் பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் நாட்டில் தங்குவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு பெரும்பாலும் வெளியே தூக்கி எறியப்படுகிறார்கள்.” என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டில் இருந்து குடியேறுபவர்கள் அமெரிக்காவில் வசிப்பதற்கும், குடியுரிமை பெறுவதற்கும் ஒரு புதிய வழியாக கோல்ட் கார்டு விசா திட்டத்தை சில நாட்களுக்கு முன்பு ட்ரம்ப் அறிவித்த நிலையில் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கோல்டு விசா தொடர்பாக இந்த நிகழ்வில் பேசிய ட்ரம்ப், ‘தற்போது கிரீன் கார்டு பெறுவது கடினம். அதே நேரத்தில் கோல்ட் கார்டு விசா நிறுவனங்களுக்கு அதிக உறுதியை வழங்கும். கோல்டன் விசா மூலமாக வார்டன், ஹார்வர்ட், எம்ஐடி மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் போன்ற முன்னணி கல்வி நிலையங்களிலிருந்து நிறுவனங்கள் நேரடியாக ஆட்களைப் பணியமர்த்தலாம்.
கோல்டன் விசா அட்டையை வாங்கி, உங்களுக்கு தேவையான சிறப்பான நபரை அமெரிக்காவில் தங்க வைக்க முடியும். இதுவும் கிரீன் கார்டு போன்றதுதான், ஆனால் அதைவிட மிகவும் சிறந்தது, மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த கார்டை பெற அவர்கள் சிறந்த நபர்களாக இருக்க வேண்டும்.
இது அடிப்படையில் கிரீன் கார்டின் ஒரு மேம்பட்ட வடிவம். மேலும், உங்களால் இப்போது கிரீன் கார்டுகளைப் பெற முடியாது. அவற்றைப் பெறுவது சாத்தியமற்றது” என்று ட்ரம்ப் கூறினார்.
