கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – அரபு நாடுகள் அவசர ஆலோசனை

காசாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
கடந்த வாரம் கட்டார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது
இந்நிலையில் கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கட்டார் அழைப்பு விடுத்தது.
இதன்படி அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று நடைபெற்றது.
இதன்போது கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, துருக்கி அதிபர் எர்டோகன், பலஸ்தீன ஜனாதிபதி மக்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.