இலங்கைக்குள் நுழைந்த இஸ்ரேலிய “டெர்மினேட்டர்” – நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி

இலங்கைக்குள் நுழைந்த இஸ்ரேலிய  “டெர்மினேட்டர்” – நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி

இலங்கைக்கு வருகை தந்த “டெர்மினேட்டர்” என்று அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியுள்ளதாக சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் பாலஸ்தீன குடிமகன் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டிற்காக “டெர்மினேட்டர்” எனப்படும் கால் ஃபெரன்புக் என்ற சிப்பாயை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிப்பாயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஹிந்த் ரஜப் அறக்கட்டளை, (The Hind Rajab Foundation) அவரை கைது செய்யுமாறு இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

“ஃபெரன்புக் கடந்த ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பாலஸ்தீன குடிமகளை கொன்று, அதுகுறித்து பெருமையுடன் சிரித்துப் பேசும் காணொளியை வெளியிட்டுள்ளார்” என்று ஹிந்த் ரஜப் குறிப்பிட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த ஒருவரின் கண்ணியத்தையும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியதாகவும் ஃபெரன்புக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் கொடூரமானவர் எனவும் ஹிந்த் ரஜப் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயு, கைது செய்யப்படுவதற்கு முன்பு கொழும்பை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து ஃபெரன்புக்கிற்கு அவசர அழைப்பு வந்ததாக சேனல் 12 தெரிவித்துள்ளது.

“தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது படைவீரர்களைப் பாதுகாக்க கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதாக” இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குத் திரும்பியதும் ஃபெரன்புக் ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுமா? என்பதைக் குறிப்பிட இராணுவம் மறுத்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க, வெளிவிவகார அமைச்சிடம் இருந்து இவ்வாறான அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டவர் ஒருவர் பிறநாட்டில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நிலையில் எமது நாட்டிற்குள் நுழைந்தால் அவரை கைது செய்ய வெளிவிவகார அமைச்சு ஊடக பொலிஸாருக்கு அறிவித்தல் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share This