காசா மீது ‘உடனடி சக்திவாய்ந்த’ தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு பிரதமர் நெதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
இன்னொருபுறம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் படைகளால் மீட்கப்பட்ட ஒரு பணயக்கைதியின் உடல் பாகங்களை ஹமாஸ் முன்னதாக ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான விதிமீறல் என்று நெதன்யாகு கண்டனம் தெரிவித்திருந்தார்.
நெதன்யாகுவின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில், மற்றொரு பணயக்கைதியின் உடலை ஒப்படைக்கும் திட்டத்தை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
