லெபனானின் பெய்ரூட் தெற்குப் பகுதியில் வான்தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும், இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பில் இருந்தும் ஏவுகணை, ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால் கடந்த மாதம் இறுதியில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தத்திற்கு பிறகு முதன்முறையாக தாக்குல் நடத்தியது.
இந்த நிலையில் இன்று காலை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஒரு கட்டிடம் மீது இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 7-க்கும் அதிகமானோர் பேர் காயம் அடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் காசா முனையில் உள்ள ஹமாஸ்க்கு உதவி செய்து வந்த ஹிஸ்புல்லா உறுப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருதரப்பு எல்லைகளில் உள்ள மக்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.