காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாக பயன்படுத்தும் இஸ்ரேல்

காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளன.
காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர் குழந்தைகள்.
இதன் மூலம், சமீபத்திய நாட்களில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 குழந்தைகள் உட்பட 101 ஆக உயர்ந்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் கள நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,054 ஆக உயர்ந்துள்ளது.
காசாவிற்கு அவசர உதவி கோரி 111 உலகளாவிய அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன.
எல்லைகளற்ற மருத்துவர்கள், ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் மற்றும் பொது மன்னிப்பு சபை போன்ற அமைப்புகள் களத்தில் உள்ளன.
காசாவிற்கு வெளியேயும் காசாவிற்குள்ளும் கிடங்குகளில் டன் கணக்கில் உணவு, சுத்தமான நீர், மருந்து மற்றும் எரிபொருள் குவிந்துள்ளன. மனிதாபிமான அமைப்புகள் இவற்றை விநியோகிப்பதை இஸ்ரேல் தடுக்கிறது.
காசா மனிதாபிமான அறக்கட்டளை என்ற பெயரில் இஸ்ரேல் அமைத்த உணவு விநியோக மையங்களை இஸ்ரேல் மரணப் பொறிகளாக மாற்றுவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில்,
‘ உணவு தேடி வரும் மக்களை குறிவைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. உணவு விநியோக மையங்களில் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு இணங்கி தங்கள் வார்த்தையை காப்பாற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.