ரோஹிங்கியா அகதிகளை மியன்மாருக்கு நாடு கடத்துவது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லையா?

ரோஹிங்கியா அகதிகளை மியன்மாருக்கு நாடு கடத்துவது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லையா?

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியா போர் அனாதைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்தாமல் இருப்பதில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கவனமாக செயற்படுகின்றார்.

முல்லைத்தீவு விமானப்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை இப்போது கூற முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அவர்களை மியன்மாருக்கே திருப்பி அனுப்புவதே அரசாங்கத்தின் திட்டம் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்திருந்ததோடு, ரோஹிங்கியாக்களின் பெயர் பட்டியல் அந்த அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் இந்த கருத்துக்கு சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த 115 அகதிகள் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் படகை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் 12 பேர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், 2025 ஜனவரி 7ஆம் திகதி புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட  உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பாதுகாப்பான நாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, ரோஹிங்கியா யுத்த அனாதைகளை நாடு கடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்தை இப்போதைக்கு அறிவிக்க முடியாது என தெரிவித்தார்.

“எடுக்கப்பட்ட தீர்மானம் என்னவென்பது குறித்து இந்த நேரத்தில் குறிப்பிட முடியாது. அனைத்து காரணங்களையும் பரிசீலித்துதான் நாம் செயற்படுகின்றோம். மனிதாபிமானம், தேசிய பாதுகாப்பு, வலையத்தின் பாதுகாப்பு என்ற அனைத்து விடயங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துகின்றோம்.”

தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நாட்டிற்குள் பிரவேசித்த முதலாவது அகதிகள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பொது பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரின் கருத்துக்கு முரணான கருத்தை தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகள் இணைந்து செயல்படுவதாக மேலும் தெரிவித்திருந்தார்.

“இந்த குடியேற்றவாசிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு இணைந்து செயற்படுகின்றன. உங்களுக்குத் தெரியும் மிகவும் அவதானமாக கையாள வேண்டிய விடயம் இது. அந்த மக்களின் மனித உரிமைகள், மனிதாபிமானத்தை பாதுகாப்பதோடு இந்த வலையத்தின் பாதுகாப்புத் தொடர்பிலும் அவதானம் செலுத்திதான் இந்த பிரச்சினையைில் தலையீடு செய்கின்றோம். அனைத்து விடயங்களையும் பரிசீலித்து பார்த்துதான் செயற்பட வேண்டும்.”

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், பொது பாதுகாப்பு அமைச்சு குறித்து எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

“இந்த விடயம் தொடர்பில் அரசு பரந்த அளவில் அவதானம் செலுத்தி, இந்த அமைச்சரவை கூட்டத்தில் அல்ல முன்னைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடினோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க முடியும். இதற்கமைய வெளிவிவகார அமைச்சு,  பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியும் இதுத் தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்படுகின்றனர்.”

ரோஹிங்கியாக்களை வெளியேற்ற வேண்டாம் என நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “இவ்வாறான மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட வேண்டாம்” எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை அவர்களின் நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், அவர்களை மியன்மாருக்கு அனுப்புவது, குறிப்பிட்ட நாட்டில் ஆபத்தில் இருக்கும் மக்களை விருப்பமின்றி திருப்பி அனுப்புவதைத் தடுக்கும் (Non-Refoulement) சர்வதேச சட்டக் கோட்பாட்டை மீறும் செயலாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நாட்டிற்குள் பிரவேசித்த முதலாவது அகதிகள் குழுவை வலிந்து வெளியேற்றுவது ‘யமனின் வாய்க்கு’ அனுப்புவது போன்றது என சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர், உலக நாடுகளுக்கு முன்பாக நாட்டின் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய கதி குறித்தும்  எச்சரித்திருந்தார்.

மியன்மாருக்கு ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, மனிதாபிமான கொள்கைகள் மற்றும் 1951ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மாநாடு உட்பட சர்வதேச சட்டக் கடமைகளை மீறுவதாகும் என சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் தலைவர் ஒமர் கமில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This