நேபாளத்தில் கைதான இஷார செவ்வந்தி – புகைப்படங்கள் வெளியாகின

இலங்கை மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்தி உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களின் புகைப்படங்களை நேபாள ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.

இஷாரா செவ்வந்தி வீரசிங்க, ஜீவதாசன் கனகராசா, தக்ஷி நந்தகுமார், தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா, கென்னடி பஸ்தியாம்பிள்ளை மற்றும் தினேஷ் நிசாந்த குமார ஆகியோர் கைது செய்யப்பட்டதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்த கணேமுல்ல சஞ்சீவ கொலையில் இஷார செவ்வந்தி முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேபாள பொலிஸார் மற்றும் இன்டர்போல் அதிகாரிகளுடன் சென்ற இலங்கை அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் இரவு இந்த சந்தேகநபர்களை கைது செய்திருந்தனர்.

அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மேவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இஷார செவ்வந்தியின் இருப்பிடத்தை பொலிஸார் கண்டுப்பிடித்தனர்.

இதனையடுத்தே இஷார செவ்வந்தியை கைது செய்யும் திட்டங்கள் ரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காத்மாண்டு நகரின் பக்தபூர் திப்போஸ் பூங்கா பகுதியில் உள்ள சொகுசு வீட்டில் இஷார செவ்வந்தி மறைந்திருந்தார். இந்த பழைய நகரப் பகுதியில் உள்ள சொகுசு வீடுகள் அதிக விலைக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.

இஷார செவ்வந்தி மறைந்திருந்த சொகுசு வீட்டிற்கு அடுத்த வீட்டில் இலங்கை பொலிஸ் அதிகாரிகளான ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வாவும் ஆகியோர் தங்கியுள்ளனர்.

அந்த வீட்டிலிருந்து தனது நடவடிக்கையைத் தொடங்கிய ரோஹன் ஒலுகலா, முதலில் இஷார செவ்வந்தியின் உதவியாளராகச் செயல்பட்ட ‘ஜே.கே. பாய்’ என்ற கென்னடி பஸ்தியாம்பிள்ளையைக் கைது செய்தனர்.

பின்னர், இஷார செவ்வந்தி இலங்கையில் இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து ரயிலில் ஜே.கே. பாய் என்ற நபரால் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது தெரியவந்தது.

ஜே.கே. பாய் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், இஷார செவ்வந்தியின் இருப்பிடத்தை சரியாக அடையாளம் கண்ட இலங்கை அதிகாரிகள் நேபாள பொலிஸாரின் உதவியுடன் அவரைக் கைது செய்தனர்.

நேபாள பொலிஸை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரின் உதவியுடன் இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பிலும் பாதாள உலகக் கும்பலிலும் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் மற்றும் ஒரு பெண் பற்றிய தகவல்கள் தெரியவந்தது.

அதன் பிறகு குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டுவில் வேறொரு இடத்தில் பதுங்கியிருந்த மூன்று குற்றவாளிகளையும் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், கெஹல்பத்தர பத்மேவின் கும்பலின் தலைவராக இருந்த கம்பஹா பாபா என்ற பாதாள உலக நபர், ரோஹன் ஒலுகலவுக்கு ஐந்து மில்லியன் லஞ்சம் கொடுத்து காவலில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி என்ற பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இஷார செவ்வந்தியைப் போலவே தோற்றத்தை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷார செவ்வந்தி, தனது புகைப்படங்கள் மற்றும் தரவுப் பதிவுகளைப் பயன்படுத்தி, போலி கடவுச்சீட்டை பெற்று குறித்த தமிழ்ப் பெண்ணின் பெயரில் ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில், சந்தேக நபரான ஜே. கே. பாய், இதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.

இந்தோனேசியாவில் கெஹல்பத்தர பத்மே மற்றும் பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்ட பிறகு இஷார செவ்வந்தியின் அனைத்து திட்டங்களும் முறியடிக்கப்பட்டன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இஷார செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் இஷாரா செவ்வந்தி கொழும்பைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பல நாட்களாக மறைந்திருந்தார்.

மதுகம பகுதிக்கும், அங்கிருந்து மித்தெனிய பகுதிக்கும் சென்று பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்துள்ளார். மித்தெனிய பகுதியில் இருந்து ​​ஜே. கே. பாய் என்ற நபர் பாதுகாப்பாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இஷார செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த ஜே. கே. பாய் என்ற நபர், படகு மூலம் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.

சட்டவிரோத கடல் வழிகள் வழியாக குற்றவாளிகளை மற்ற நாடுகளுக்கு கடத்துவதையே தொழிலாகக் கொண்ட ஜே. கே. பாய், நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக பத்மேயிடமிருந்து பல லட்சம் ரூபாய்களைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இஷார செவ்வந்தியை இந்தியாவிற்கு அழைத்துச் சென்ற ஜே.கே.பாய், சுமார் இரண்டு வாரங்கள் அங்கேயே தங்க வைத்துள்ளார். பின்னர் ரயிலில் நேபாளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆறு நாட்கள் நீண்ட ரயில் பயணத்திற்குப் பிறகு, இஷார செவ்வந்தி தனது தொடர்புகளைப் பயன்படுத்தி நேபாள எல்லை வழியாக நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர், காத்மாண்டு நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஜே.கே.பாய் என்ற சந்தேக நபரால் இஷார செவ்வந்தி மறைந்து வாழ்வதற்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This