வாகனங்களை விடுவிப்பதில் தாமதமா?

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்களை சரிசெய்ய நிதி அமைச்சும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் உடனடியாக தலையிடும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியதுடன், அவர் மேலும் தெரிவிக்கையில்,
”ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இந்த பொறிமுறையில் குறைபாடு இருந்தால், அதை சரிசெய்ய அரசாங்கம் தலையிடும்.
அரசாங்கம் வாகனங்களை விடுவிக்கத் தவறியதாக குற்றம் சாட்டுவது நியாயமானதல்ல. அவை உரிய பொறிமுறையின் கீழே விடுவிக்கப்படுகின்றன.” என்றார்.
இறக்குமதி விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சுமார் 400 வாகனங்கள் இலங்கை சுங்கத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தேங்கி நிற்கின்றன என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) கூறியது.