தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளம் செயலிழந்துள்ளதா?

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளம் செயலிழந்துள்ளதா?

இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளம் தொடர்ந்து செயற்படுகிறது என்பதையும் அத்தளத்தில் உள்ள E-Submission பிரிவு ஒரு தற்காலிக பிரிவு என்பதால் அது செயலிழந்துள்ளது என்பதையும் இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உறுதிப்படுத்தியது.

இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளம் செயலிழந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் சில பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு பகிரப்பட்ட பதிவுகளில் “NPP அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் E-Submission பிரிவு செயலிழந்துள்ளது.

இதனால் வெளிப்படைத்தன்மையும் தகவல் அறியும் உரிமையும் பாதிக்கப்படுகின்றன.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப் பதிவுகள் பலராலும் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

சமூக வலைதளங்களில் குறிப்பிட்டது போல் இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளம் செயலிழந்துள்ளதா என ஆராய்ந்ததில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் E-Submission பிரிவு மாத்திரம் செயலிழந்துள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இது குறித்து தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் FactSeeker வினவிய போது, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் இணையதளம் தொடர்ந்து செயற்படுவதாகவும் குறித்த E-Submission பிரிவு ஒரு தற்காலிக பிரிவு என்றும் தெரிவித்தனர்.

மேலும், இப்பிரிவு மாறுபட்ட துறைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை இணைய வழியில் ஒருங்கிணைக்க பயன்படுத்தபட்டதாகவும் தெரிவித்தனர்.

இப்பிரிவானது புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்பிலிருந்தே இருந்ததாகவும் பயிற்சி பட்டறைகளுக்குத் தேவையான தகவல்களை சேகரிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தனர்.

ஆகவே, இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளம் தொடர்ந்து செயற்படுகிறது என்பதையும் அத்தளத்தில் உள்ள E-Submission பிரிவு ஒரு தற்காலிக பிரிவு என்பதால் அது செயலிழந்துள்ளது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

நன்றி – FactSeeker

Share This