தூதரகங்களில் அரசியல் நியமனங்களை மேற்கொள்ள தயாராகும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்?

தூதரகங்களில் அரசியல் நியமனங்களை மேற்கொள்ள தயாராகும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்?

(கனூஷியா புஷ்பகுமார்)

 

உலகின் முக்கிய நாடுகளுக்கான தூதர்களின் வெற்றிடங்களுக்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க தவிர்த்து ஏனைய அனைத்து அரசியல் நியமனங்களாக நியமிக்கப்பட்ட தூதர்களை மீள அழைக்க வெளியுறவுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்காக மகிந்த சமரசிங்க குறித்த பதவியை தொடர வேண்டும் எனக் கூறி, அவர் குறித்த பதவியில் தொடர்ந்து நீடிப்பது நியாயப்படுத்தப்பட்டது.

எனினும், தூதர்கள் மீள அழைக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாக்கப்பட்ட பதவிகளுக்காக புதிய நியமனங்களை மேற்கொள்ள அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றமை தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக மகேஷினி கொலொன்னே நியமிக்கப்படவுள்ளார். இவர், வெளியுறவு அமைச்சில் தொழில்முறை இராஜதந்திர சேவையின் அதிகாரியொருவராவார்.

ஜப்பானுக்கான புதிய தூதராக பேராசிரியர் ஜனக குமாரசிங்க நியமிக்கப்படவுள்ளார்.

முன்னாள் விமானப்படை தளபதி உதேனி ராஜபக்ச தென்னாபிரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதேவேளை, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக நிமல் சேனாதீர நியமிக்கப்படவுள்ளதுடன் அவர் தற்போது ஸ்கொட்லாந்தில் தனது முனைவர் பட்டத்தை தொடர்ந்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

பேராசிரியர் அரூஷா குரே ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், தற்போது ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருக்கும் சந்தர்ப்பத்தில் தூதரகங்களை அரசியல்மயமாக்குவது குறித்து பல விமர்சனங்களை எழுப்பி வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share This