ரணிலின் கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுகிறதா? எதிர்க்கட்சிகளுக்கு சுனில் ஹந்துன்நெத்தி பதில்

ரணிலின் கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுகிறதா? எதிர்க்கட்சிகளுக்கு சுனில் ஹந்துன்நெத்தி பதில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை சமகால அரசாங்கம் பின்பற்றுவதாக மக்கள் மத்தியில் போலி பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன. எமது அரசாங்கம் அமையப்பெற்று நூறு நாட்களை எட்டியுள்ள சூழல் எந்தவொரு நபர் மீது ஊழல் – மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. அதன் ஊடாகவே எமக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வித்தியாசம் இருப்பதை புரிந்துக்கொள்ள முடியும் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

”அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கூறிவருகின்றன. கடந்த நூறு நாட்கள் அவர் அரசாங்கத்தில் இருந்து இருந்தால் எத்தனை தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பார்? ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரச முறை பயணமாக இந்தியாவுக்குச் சென்றார். இரண்டாவது பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இருந்து இருந்தால் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் எத்தனை தடவை வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பார்கள்? எவ்வளவு செலவு செய்திருப்பார்கள்? எமது அமைச்சர்கள் எவரும் அவ்வாறு செய்யவில்லை.

கடந்த நூறு நாட்களில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பிகளுக்கு எதிராக ஊழல் – மோசடி குற்றச்சாட்டை எவரும் முன்வைத்தார்கள்?. கொடுக்கல் வாங்களில் மோசடி, விலை மனு கோரலில் மோசடி என எவ்வித குற்றச்சாடுகளும் முன்வைக்கப்படவில்லை. இலஞ்சம் பெற்றிருக்கிறார்கள் என எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை. அவ்வாறெனில் ரணில் விக்ரமசிங்கவை எவ்வாறு எம்முடன் சேர்த்து பேச முடியும்?

அரிசி தட்டுப்பாடு உட்பட சில நடைமுறை ரீதியான பிரச்சினைகள் உள்ளன. நடைமுறை பிரச்சினைக்கும் முழுமையாக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இந்த நாட்டு மக்கள் இதுதொடர்பில் அறிவார்கள். 49 நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாதென மக்களுக்கு தெரியும். ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கும் இது தெரியும். தெரிந்துகொண்டுதான் எம்மை உருவாக்குமாறு கோருகின்றனர்.

கிளீன் ஸ்ரீலங்கா உட்பட பல வேலைத்திட்டங்களை கிராமங்களுக்கு கொண்டுசென்றுள்ளோம். ஒரு ரூபா கூட ஊழல் செய்யாது இந்தப் பணிகளை செய்கின்றனர். கோப் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தகவல்களை பெற்று ஊழல் – மோசடிகள் இடம்பெற்றால் அதனை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்த முடியும்.

ஜனாதிபதி காலை 9 மணிக்கு ஆரம்பித்த கூட்டமொன்றை இரவு 7 மணிக்குதான் முடிந்தார் என்றும் இந்த கூட்டம் முடியும்வரை இரண்டு தேனீர் இடைவேளைகளை மாத்திரமே அவர் வழங்கினார் என்றும் நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். அவ்வாறுதான் நாம் பணியாற்றுகிறோம். எமது அமைச்சுகளிலும் அவ்வாறுதான் பணி இடம்பெறுகிறது. வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளை சரிசெய்து முன்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.” என்றார்.

 

Share This