பாகிஸ்தானில் இராணுவ ஆட்சிக்கு அடிதளம் இடப்படுகிறதா?

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சிக்கு அடிதளம் இடப்படுகிறதா?

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி உள்ளார். இந்த நிலையில் இராணுவ தளபதி ஆசிம் முனிருக்கும், ஜனாதிபதி சர்தாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் 4 நாட்கள் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போரில், பாக். வெற்றி பெற்றுவிட்டதாக கூறி பாக். இராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு பீல்ட் மார்ஷல் பதவியை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வழங்கினார்.

மேலும் போரில் அமெரிக்கா உத்தரவுக்கு இணங்க நடந்ததால், பாக். இராணுவ தளபதி ஆசிம் முனீரை அமெரிக்காவுக்கு ஜனாதிபதி டிரம்ப் வரவழைத்தார். பெரும்பாலும் பிறநாட்டு ஜனாதிபதிகள், பிரதமர்களை மட்டுமே சந்திக்கும் டிரம்ப், விதிவிலக்காக ஆசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து விருந்து கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பாக். சென்ற ஆசிம் முனீருக்கும், ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிர்வாக நியமனம் தொடர்பாக இராணுவ தளபதி ஆசிம்முனீரின் பரிந்துரைகளை ஜனாதிபதி சர்தாரி நிராகரித்ததால் இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை விட முக்கியமாக பாக். மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி சமீபத்தில் தீவிரவாதிகள் ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புகிளம்பி உள்ளது. இதனால் பாக். ஜனாதிபதி மற்றும் இராணுவ தளபதி இடையே மேலும் மோதல் அதிகரித்து உள்ளது. இதனால் அங்கு ஜனாதிபதி சர்தாரியை பதவி நீக்கம் செய்து விட்டு வேறு ஒரு புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வது அல்லது இராணுவ ஆட்சியை அமல்படுத்துவது என்ற நோக்கில் இராணுவ தளபதி ஆசிம் முனீர் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

* ஜெனரல் அசிம் முனீர் யார்?
பாக்.கில் 2022 நவம்பர் மாதம் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் அசிம் முனீர், இராணுவ உளவுத்துறை மற்றும் பாகிஸ்தானின் உயர்மட்ட உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ இரண்டிலும் அனுபவமுள்ள அதிகாரி ஆவார். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவி பறிப்பிலும் அவர் முக்கிய நபராக காணப்பட்டார்.

* பாகிஸ்தானில் 1958, 1977 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
* கடைசி இராணுவப் புரட்சி 1999ஆம் ஆண்டு ஜெனரல் பர்வேஸ் முஷாரப் தலைமையில் நடந்தது.

Share This