இலங்கைக்கு அருகே மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ஐரிஸ் தேனா!!! உலகளாவிய கடல்சார் போராக மாறும் அபாயம்

இலங்கைக்கு அருகே மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ஐரிஸ் தேனா!!! உலகளாவிய கடல்சார் போராக மாறும் அபாயம்

இலங்கை கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீதான அமெரிக்காவின் தாக்குதல், போரின் தன்மையையும் நோக்கத்தையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது.

நேற்று (04) வரை பாரசீக வளைகுடா பகுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் மட்டுமே இருந்த நேரடி இராணுவ மோதல்கள், இப்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் இலங்கைக்கு அருகிலுள்ள கடல்களுக்கும் பரவியுள்ளன.

இந்தப் போர் தற்போது பிராந்திய மோதலாக இல்லாமல் உலகளாவிய கடல்சார் போராக மாறியுள்ளது.

இலங்கைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகள் தங்கள் எண்ணெய் விநியோகத்தில் 60 சதவீதத்தை மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்தே பெறுகின்றன. இந்நிலையில் மாற்றுவழிகளை ஆசிய நாடுகள் தேடுகின்றன.

இந்தியாவின் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களான மங்களூர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோநெட் LNG ஆகியவை பாதுகாப்பு அபாய மதிப்பீட்டிற்குப் பின்னர் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை மட்டுப்படுத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளன.

இந்தியாவும் ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்க எதிர்பார்க்கிறது. இந்தோனேசியாவும் ஜப்பானும் அமெரிக்காவிலிருந்து அதிக எண்ணெயைப் பெற முயற்சிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், இலங்கை மாறிவரும் உலகளாவிய சூழ்நிலையால் நேரடியாக பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கின்றது.

ஐரிஸ் தேனா தாக்கப்பட்டதன் பின்னர்

நேற்றைய தாக்குதல் ஈரானை அதன் நடவடிக்கைகளை மேலும் தீவிரமடைய செய்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் மூடப்பட்டு தற்போது ஐந்து நாட்கள் ஆகின்றன.

இதனால் மத்திய கிழக்கிலிருந்து வரும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளன.

இலங்கைக்கு அருகில் நடந்த தாக்குதல்களின் நேரடி விளைவாக கடல்சார் காப்பீட்டு திட்டங்கள் 500 வீததத்தல் அதிகரித்துள்ளன.

காப்பீட்டு நிறுவனங்கள் பொதுவாக கப்பல் பயணிக்கும் பாதையின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கள் திட்டங்களை நிர்ணயிக்கின்றன.

முன்னர் பாதுகாப்பாகக் கருதப்பட்ட இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் ஒரு போர்க்கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, காப்பீட்டாளர்கள் முழுப் பகுதியையும் “அதிக ஆபத்து மண்டலமாக” குறிப்பிட்டுள்ளனர்.

ஹார்முஸ் நீரிணை வழியாக விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கலால் உலகளாவிய எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 வீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே முன்னெடுக்கப்படுகின்றனது.

இதனால், அங்கு ஏற்படும் எந்தவொரு இடையூறும் உலகளாவிய எண்ணெய் விலைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் எரிபொருள் விலை அதிகரிப்பில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விநியோகங்கள் மீது ஈரானிய தாக்குதல்கள்

சனிக்கிழமை முதல் ஹார்முஸ் நீரிணை பகுதியில் குறைந்தது எட்டு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, அவற்றில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் அடங்கும்.

மோல்டா கொடியுடன் கூடிய சஃபீன் பிரெஸ்டீஜ் கப்பல் புதன்கிழமை தாக்கப்பட்டதாகவும், அதன் குழுவினர் கப்பலை கைவிட்டதாகவும் இங்கிலாந்து கடல்சார் போக்குவரத்து அலுவலகம் (UKMTO) தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா துறைமுகத்திற்கு அருகில் லிப்ரா டிரேடர் மற்றும் கோல்ட் ஓக் கப்பல்களும் சிறிய சேதத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஃபீன் பிரெஸ்டீஜ் போன்ற வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் கப்பல் பயணங்களை ரத்து செய்யத் தூண்டியுள்ளன.

இந்த தாக்குதல்களால் ஈராக், சவுதி அரேபியா மற்றும் குவைத் போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

கத்தாரின் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் எரிவாயு உற்பத்தியையும் முற்றிலுமாக பாதித்துள்ளது. சவுதி அரேபியாவின் முக்கிய ஏற்றுமதி முனையமான ராஸ் தனுராவும் புதன்கிழமை தாக்கப்பட்டது.

கத்தார் புதன்கிழமை முதல் அதன் எரிவாயு உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துவதாகவும், இயல்புநிலை திரும்ப குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக் தனது எரிபொருள் உற்பத்தியைக் குறைத்துள்ளது, மேலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் எரிபொருளை ஏற்றுமதி செய்ய முடியாமல் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

ரொய்ட்டர்ஸ் மற்றும் மரைன் டிராஃபிக் தரவுகளின்படி, எரிபொருள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) டேங்கர்கள் உட்பட சுமார் 200 கப்பல்கள் தற்போது ஈராக், சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற முக்கிய வளைகுடா உற்பத்தியாளர்களின் கடற்கரையிலிருந்து திறந்த கடல்களில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

கடல்சார் தரவுகளின்படி, ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே நூற்றுக்கணக்கான கப்பல்கள் உள்ளே நுழைய முடியாமல் சிக்கித் தவிக்கின்றன.

உலகின் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகங்களில் ஐந்தில் ஒரு பங்கு இந்த முக்கியமான கடல் பாதை வழியாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்காவால் மட்டும் சாத்தியமாகுமா?

இந்நிலையில், “உலகிற்கு எரிசக்தி ஓட்டத்தை உறுதி செய்ய அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கும்,” என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின் பின்னரே இலங்கைக்கு அருகே ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கியது. இதனால் நிலைமை தற்போது கடுமையாக மாறியுள்ளது.

கடல்சார் காப்பீட்டுக்கான செலவு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க கடற்படை உலகளாவிய போரில் ஒன்றில் நுழைந்து நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.

ட்ரம்ப் சொல்வது போல், மத்திய கிழக்கிலிருந்து வரும் அனைத்து கப்பல்களுக்கும் அமெரிக்கா மட்டுமே பாதுகாப்பை வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது.

தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளான பிராந்தியத்தில் இயங்கும் அனைத்து கப்பல்களுக்கும் அமெரிக்கா பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்ப்பது டைமுறைக்கு மாறான ஒன்று என உலகின் முன்னணி கப்பல் சங்கங்களில் ஒன்றான BIMCOஇன் பாதுகாப்பு அதிகாரி ஜேக்கப் லார்சன் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை வழியாக தினமும் ஏராளமான கப்பல்கள் செல்கின்றன. இவை அனைத்தையும் பாதுகாக்க, அமெரிக்க கடற்படை இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை பராமரிக்க வேண்டும்.

அத்தகைய நடவடிக்கைக்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவு பல மடங்காக அதிகரிக்கும்.

நாள் ஒன்றுக்கு போர்க்கப்பல் ஒன்றை இயக்குவதற்கு லட்சக்கணக்கான டொலர்கள் செலவாகும். சில நேரங்களில், அந்த செலவு மில்லியன் டொலர்களாக அதிகரிக்கும்.

இதில் ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்களின் விலைகளையும் கணக்கிட வேண்டும்.

இவ்வாறு அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை வெளிநாட்டுப் போருக்கு செலவிடுவது தொடர்பாக அமெரிக்காவிற்குள் ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்கக்கூடும்.

ஆகவே இந்த விடயத்தில் அமெரிக்கா தனித்து செயற்பட முடியாது.

அவர்கள் தங்கள் நட்பு நாடுகளான (பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகளின்) ஆதரவைப் பெற்று, ஓரளவிற்கு ‘கடற்படை கூட்டணியாக’ நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றாலும், இன்றுவரை இது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்த நெருக்கடி நீடித்த உலகப் போராக மாற வாய்ப்புள்ளது என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )