
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பழிதீர்க்க ஈரான் தயார் – கடற்படைத் தளபதி எச்சரிக்கை
இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் டார்பிடோ தாக்குதலால் பலியான 87 ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானிஎச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 4 ஆம் திகதி, இலங்கையின் காலி கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய கடற்படையின் IRIS Dena போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ மூலம் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 87 மாலுமிகள் கொல்லப்பட்டனர். 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்தியாவுடன் இணைந்து நடத்தப்பட்ட கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தக் கப்பல் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
“எதிரியின் இந்தக் குற்றத்தை நாங்கள் மறக்க மாட்டோம். எமது மாவீரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்குவோம். எதிரி சற்றும் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து அவர்களைத் தண்டிப்போம்” என ஷஹ்ராம் இரானி தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட மாலுமிகளுக்கான இறுதிச் சடங்குகள் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் கௌரவிப்பு வைபவங்கள் இடம்பெற்று வருகின்றன.
