அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் பரிசீலனை?

தங்களுடன் மீண்டும் அணுசக்திப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரானுக்கு அவசர தேவை கிடையாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியே தீரவேண்டும் என்று அமெரிக்கர்கள் கூறுகின்றனர்,” தொலைக்காட்சிவழி ஆற்றிய உரையில் அபாஸ் அராக்சி கூறினார்.
பேச்சவார்த்தையை எங்கே, எப்போது, எப்படி நடத்தலாம் போன்ற அம்சங்களை டெஹ்ரான் ஆராய்ந்து வருகிறது. அதேவேளை, அவசர அவசரமாக நடத்தப்படும் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட ஈரான் தயாராய் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமான் சமரசம் செய்த அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையை திரு அராக்சி ஈரான் தரப்பில் தலைமை தாங்கினார். கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் எதிர்பாரா வகையில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்தப் பேச்சுவார்த்தை நின்றுபோனது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானின் பல இராணுவத் தலைவர்களும் அணுசக்தி அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். அதோடு, டெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலை, அதிக மக்கள் வாழும் நகர்ப்பகுதிகள் ஆகியவையும் இஸ்ரேலியத் தாக்கதல்களுக்கு உள்ளாயின.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், ஈரான் மீதான தடை உத்தரவுகளை விலக்கத் தாம் தயாராய் இருப்பதாகக் கூறியிருந்தார். இம்மாதம் ஏழாம் தேதி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் நடந்த இரவு விருந்து நிகழ்வின்போது திரு டிரம்ப் அவ்வாறு கூறினார்.
டிரம்ப்பின் சிறப்புத் தூதரான ஸ்டீவ் விட்கோஃப், இந்த வாரம் ஈரானுடனான சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியிருந்தார். விட்கோஃப், அமெரிக்கத் தரப்பில் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினார்.
பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையாவிட்டால் தாங்கள் மறுபடியும் தாக்கப்படமாட்டோம் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று திரு அராக்சி எடுத்துரைத்தார்.
“மறுபடியும் போர் எழாது என்ற உத்தரவாதம் ஓரளவு அளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,” என்று மேல்விவரம் ஏதும் தராமல் அராக்சி குறிப்பிட்டார்.
“ஈரானிய மக்களின் நலன்களைக் கட்டிக் காக்க வாய்ப்புக் கிடைத்தால் அதைத் தவறவிட மாட்டோம். அரசதந்திர ரீதியாகத் தீர்வுகாணும் கதவுகள் என்றும் மூடப்படாது,” என்றும் அவர் விவரித்தார்.