நாமல் ராஜபக்சவின் சட்டமானி பட்டம் தொடர்பில் விசாரணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது சட்டடமானி பட்டத்தை எவ்வாறு பெற்றார் என்பதை விசாரிக்க குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவின் சட்டமானி பட்டத்திற்கான பரீட்சையை நிறைவு செய்வதில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட பல முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச சட்டப் பரீட்சையை குளிரூட்டப்பட்ட அறையில் எழுதியதாகவும், அவருக்கு முன்கூட்டியே வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாகவும், இணைய வசதியுடன் கூடிய கணினி வழங்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச, இவ்விடயம் நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் என்றும் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல தரப்பினர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் துறையிடம் புகார் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.