ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தானில் மேலும் 5 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தான் பால்க் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. ஒழுக்கக்கேட்டை தடுக்கும் நடவடிக்கையாக இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்தது.
இந்நிலையில் தலிபான் தலைவரின் உத்தரவின் பேரில் பாக்லான், பதக் ஷான், குண்டுஸ், நங்கர்ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்களிலும் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கடந்த 2021 ஆகஸ்டில் கைப்பற்றிய பிறகு இதுபோன்ற தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இதனால் அரசு அலுவலகங்கள், தனியார் துறை, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வைபை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் மொபைல் இணைய சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது.
இந்நிலையில் ஒழுக்கக்கேடான செயல்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாகாண அரசுகள் கூறியுள்ளன. இந்த தடையை ஆப்கானிஸ்தான் ஊடக ஆதரவு அமைப்பு கண்டித்துள்ளது.
“தலிபான் தலைவரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, லட்சக்கணக்கான மக்களின் இலவச தகவல் மற்றும் அத்தியா வசிய சேவைகள் பெறுவதை தடுப்பது மட்டுமன்றி, கருத்து சுதந்திரம் மற்றும் ஊடகப் பணிக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஆஸ்திரேலியாவில் வாழும் ஆப்கானிஸ்தான் சமூகமும் இதனை வன்மையாகக் கண்டித்துள்ளது.