குறுஞ்செய்திகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

குறுஞ்செய்திகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

குறுஞ்செய்திகள் மற்றும் குரல் அஞ்சல்கள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மக்களின் தனியுரிமையை மீறும் வகையில் குறுஞ்செய்திகள் மற்றும் குரல் பதிவுகளைப் பயன்படுத்தி தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்துமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிந்தக குலரத்ன சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை, அமைதியான காலத்தில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் இணைப்புகளை நீக்குவது குறித்து சமூக ஊடக தளங்களான மெட்டா, டிக்டோக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது குறித்த நிறுவனங்கள் ஆதரவளித்தது போலவே, உள்ளூராட்சித் தேர்தல்களின் போதும் ஆதரவை வழங்கும் என்று அவர் கூறினார்.

மேலும் , சமூக ஊடகங்களில் தேர்தலை இலக்காகக் கொண்ட தவறான தகவல்கள், பிரசாரம் மற்றும் வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த நாட்டின் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் ஒரு வழிமுறை நிறுவப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

Share This