இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரம் – பிரதமர் ஹரிணி, சீன ஜனாதிபதி உரையாடல்

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அயல்நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தாக கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளுடன் இலங்கை பேணி வருகின்ற உறவு முறைகள் மற்றும் பொருளாதார உதவிகள் பற்றி ஹரிணி சீன ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறியுள்ளார். முக்கியமாக பிராந்திய பாதுகாப்பு தொடர்பான தமது அக்கறையை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஹரிணியிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
ஆனால் சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விபரங்கள் எதுவும் இல்லை.
சீனாவுக்கு மூன்று நாள் பயணம் செய்துள்ள ஹரிணி அமரசூரிய, அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரச உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்கு ஏற்புடைய, சீன முதலீடுகள் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களும் பேசப்படடதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியை நேற்றுச் செய்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் சந்தித்து உரையாடியபோது இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகரங்கள் பற்றிய அலசி ஆராய்ந்தாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் அதிகாரபூர்வமாக சந்திப்பு பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பு தொடர்பாக கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் சந்திப்பு இடம்பெற்றதாகவும் சீன – இலங்கை உறவு பற்றி விரிவாக ஆராயப்பட்டது என்றும் குறிப்பாக இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு பற்றிய விடயங்களில் சீன அரசு உதவி வழங்குகின்றமை பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சமூக – பொருளாதார, கடல்சார் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துதல், சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் (Belt and Road) திட்டத்தின் கீழ், சீன – இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டாக அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தியாவுடன் இலங்கை நெருக்கமாக உறவை பேணிவருவதாக பிராந்திய மட்டத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இலங்கை சீனாவுடன் மீண்டும் நெருக்கமான உறவை பேணுவதற்கான முயற்சிகளை பிரதமர் ஹரிணி முன்னெடுத்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.
ஹரிணியின் சீன பயணம் தொடர்பாக சீன ஊடகங்களும் முக்கியத்துவம் வழங்கியுள்ளன.